ஓசூரில் அமைந்துள்ள டைட்டான் தொழிற்சாலைகளில், நூற்றுக்கும் மேற்பட்ட காது கேளாதவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஓசூரை தலைமை இடமாக கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் அறக்கட்டளை, 1994 ஆண்டு முதல், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காது கேளாதோர் நலச்சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில், இந்தியாவிற்கே முன்மாதிரியாக, பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சங்கம் துவங்கப்பட்ட 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அதை விழாவாக முன்னெடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், வடகிழக்கு மாநிலங்களை ஒன்றிணைத்து, சிறப்பு ஏற்பாடுகளுடன், ஓசூர் மத்திகிரி பகுதியில் அமைந்துள்ள, டைட்டான் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியில் இரண்டு நாள் விழாவாக சிறப்பிக்கப்பட்டது.
நேற்று நவம்பர் இருபத்து மூன்றாம் நாள், சனிக்கிழமை, டைட்டான் கவுன்சில் சமூக அரங்கில், கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசிற்கும் முன் வைக்கப்பட்டன. அதில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதாக, தமிழ்நாடு அரசு இப்பொழுது வழங்கிய வரும், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கான உதவித்தொகையுடன், கூடுதலாக ரூபாயா ஆயிரம் சேர்த்து வழங்க வேண்டும் எனவும், இந்தியாவின் பிற மாநில அரசுகளும், ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசு வழங்குவது போல, காது கேளாதவர்களை, உடல் ஊனமுற்றவர்களாக கருதி, சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை 24 நவம்பர், டைட்டான் பள்ளி வளாகத்தில், கலை நிகழ்ச்சிகளும், தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவுகளும், அதைத் தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காது கேளாதவர்கள் பலர் கலந்து கொண்டனர். வடகிழக்கு மாநிலங்களான, திரிபுரா, நாகலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலம் ஆகிய மாநிலங்களில் இருந்து, காதுகேளாதோர் கலந்துகொண்டு, அவர்களின் தொன்மையான நடனத்தை, நடனமாடி நிகழ்ச்சியில் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, பெங்களூரு, மதர் இந்தியா ஃபார்ம்ஸ் தலைவர் ஆர் துரைராஜ் அவர்கள், டாட்டா எலக்ட்ரிகல்ஸ் வாரிய உறுப்பினர் திரு ஆர் விவேகானந்தா, இன்னோசைன்ஸ் தலைமை செயல் அலுவலர், திரு செல்வக்குமார் நடேசன், டைட்டான் நிறுவனத்தின் பொது மேலாளர், திரு டி வி கிருஷ்ணமூர்த்தி, டைட்டான் தொழிற்சங்க தலைவர், திரு எஸ் எல் என் மூர்த்தி, டைட்டான் தொழிற்சங்க பொதுச் செயலாளர் திரு பாஸ்கர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, காது கேளாதோருக்கு தங்களது நல்லாதரவை வழங்கும் விதமாக, கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.








