ஓசூர் தேர் பேட்டையில் டாஸ்மாக் சரக்கு அடித்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பரிந்துரையின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நடவடிக்கை. இந்தச் செய்தி, இம்ரான் கான் குடும்பத்தினரை வருத்தம் அடையச் செய்துள்ளது.
ஓசூர் தேர் பேட்டையை சேர்ந்தவர் 26 வயதுடைய குப்புசாமி. இவர் கம்பரசர் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர்கள், தேர் பேட்டையை சேர்ந்த பழங்கள் விற்பனையாளர், 28 வயதுடைய சேகர் மற்றும் பார்வதி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி, 27 வயதுடைய இம்ரான் கான்.
கடந்த அக்டோபர் 22ஆம் நாள், நண்பர்களான இவர்கள் மூன்று பேரும், ஓசூர் தேர் பேட்டை அருகே உள்ள ஏரி பகுதியில், ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், ஆத்திரமடைந்த இம்ரான் கான் மற்றும் சேகர், ஆகிய இருவரும் சேர்ந்து குப்புசாமியை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் நகர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் குற்றவாளிகளான இம்ரான் கான் மற்றும் சேகர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், இம்ரான் கான் மற்றும் சேகர், ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சரயு, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து ஓசூர் நகர் காவல் நிலைய காவலர்கள், இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.








