ஓசூர் அருகே, தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடைக்காத கலை புதையல்! ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய, கலை சிறப்புகளை உள்ளடக்கிய, வரலாற்று தடயங்களில் ஒன்று! சுமார், 3000 சதுர அடி பரப்பளவில் கல்வெட்டு ஓவியங்கள்!
ஓசூரை அடுத்த, தளி அருகே, சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர், கும்மளாபுரம். ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வரலாற்று தடயங்களை தன்னகத்தே கொண்ட நூற்றுக்கணக்கான கோவில்கள்.
இங்கு அமைந்துள்ள, நூற்றுக்கணக்கான வரலாற்று கலைகளை தன்னகத்தே கொண்ட கோவில்களில், வீரபத்திர சாமி கோவில், 1000 ஆண்டு வரலாற்றை சுமந்து நிற்கும் வரலாற்றுச் சின்னம்.
ஆயிரக்கணக்கான கல்வெட்டு ஓவிய சிற்பங்கள். அவற்றை சிற்பங்கள் என்று சொல்வதைக் காட்டிலும், கல்வெட்டு ஓவியங்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், அவற்றில் சிலைகள் எதுவும் இல்லை. தாங்கள் எடுத்துக் கூற வந்ததை, கல்லில் ஓவியங்களாக செதுக்கி, தங்களது கலை திறனை, 1000 ஆண்டுகளுக்கு முன், வெளிப்படுத்தி உள்ளனர்.
ஒய்சாளர்கள் கி பி 1006 முதல், 1346 வரை ஆட்சியில் இருந்துள்ளனர்.
பல்லவர்களைப் போலவே, இந்த ஒய்சாளர்களும், கல்லால் ஆன கலை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வடிப்பதில் சிறப்பு பெற்றவர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கலைக்கூடத்தை, ஒய்சாளர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய விஜயநகர பேரரசர்கள், இதன் சிறப்பை கருத்தில் கொண்டு, நன்றாக பேணி காத்து வந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லாத, ஒய்சாளர்களின் கலை சுவடு, இங்கு மட்டுமே, இதுவரை முழுமையாக அழியாமல், முட்டுக் கல் கொடுத்து, ஓரளவு சிதைந்த நிலையில், காட்சியளித்து வருகிறது.
சைவ சமயத்தின் 63 நாயனார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் கதை சிற்பத் தொகுப்பு இந்த சுவர் கல்வெட்டு ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது. இது பார்ப்போரை உறைந்து போக வைக்கிறது.
முதல் காட்சியில், சிறுத்தொண்ட நாயனாரின் குழந்தை குருகுலத்தில் படித்து வருகிறது. அடுத்த சிற்பத்தில், இச்சிறுவன் அழைத்துச் செல்லப்படுகிறான். மூன்றாவது சிற்பத்தில், சிறுவனை வெட்டி, சிவனுக்கு படைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அடுத்த கல்வெட்டில், சிறுத்தொண்ட நாயனார், தம் மீது வைத்த நம்பிக்கையை மெச்சி, குழந்தையை சிவன், மீண்டும் வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
யானை, குதிரை, நடனமாடும் பெண்கள், சண்டையிடும் ஆண்கள், போர் வீரர்களின் போர் காட்சிகள், குருகுல கல்வி முறை, அரசனை பல்லக்கில் தூக்கிச் செல்லும் காட்சி, சிவன், தமிழர்களின் இறைவன் முருகன், திருமண சடங்கு முறைகள், என தமிழகத்தில் அன்றைய சூழலில் இருந்த பழக்க வழக்கங்களை கற்களில் கல்வெட்டு ஓவியமாக வரைந்து வைத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான, வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு, மிகப்பெரிய சிற்ப கல்வெட்டு ஓவியத் தொகுப்பை, இங்கு மட்டுமே காணமுடிகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் மலைத்துக் குறிப்பிடுகின்றனர்.
கலைக்கூடத்தின் உள்ளே, வீரபத்ர சுவாமி சிலை கருங்கல்லால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தனியாக, வெளியே, அம்மன் சிலை, கருங்கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நந்தி சிலை, கையால் அசைக்கும் வாய்ப்புடன் அமைந்துள்ளது இங்குள்ள மற்றொரு சிறப்பு. வேறு எங்கேயும் இப்படியான நந்தி சிலை அமைந்ததை பார்வையாளர்கள் கண்டிருந்தால், comment section ல் பதிவிடுங்கள்.
வாயிலில் இரண்டு நந்தி சிலைகள், பாதி மண்ணில் புதைந்தவாறு காட்சியளிக்கின்றன.
வெளிப்புறச் சுவர்களில் மட்டுமே கல்வெட்டு ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே எந்த சிறப்பு கல்வெட்டு அடையாளங்களும் இல்லை. இதுவும், ஒய்சாளர் கட்டடக் கலையின் ஒரு சிறப்பு.
இக்கோவிலின் அருகே, சிதிலமடைந்த நிலையில், மண்ணில் புதைந்து ஒரு கோவில் காட்சி அளிக்கிறது. சில கற்சிலைகள் மட்டும் மண்ணிற்கு மேல் இருக்கின்றன.
அருகே தோட்ட பயிர்கள் செய்பவர்கள், கற்சிலைகளை பெயர்த்து எடுத்து தங்களது தேவைகளுக்கு பயன்படுத்துவது, மக்களுக்கு இந்த கலை சிறப்புகள் குறித்தும் அதை பாதுகாக்க வேண்டிய தேவை குறித்தும் அடிப்படை புரிதல் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது.
சிதிலமடைந்த கோவில் அருகே, ஒரு கல்வெட்டு நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கல்வெட்டின் பகுதி, பூஞ்சையால் மூடப்பட்டுள்ள நிலையில், சில எழுத்துக்கள் மட்டும் கண்ணில் படுகின்றன. அது கன்னட மொழியில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என கூறுகின்றனர். விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் இது செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிதிலமடைந்த கோவிலை குறித்து 300 பாடல்கள் இயற்றப்பட்டதாக அதில் எழுதியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடைக்காத இந்த அரிய கலை தொகுப்பு, வேதிப்பொருள் கலவையினால் செய்த வெள்ளை நிற பெயிண்ட் போன்ற பொருட்களைக் கொண்டு பூசி, முட்டுக்கல் கொடுத்து தாங்கி நிற்கும் அவல நிலையில் நிற்கும் காட்சி காண்போரை வருந்தச் செய்கிறது.
இக்கலை புதையலை பாதுகாத்து வரும் இளைஞர் சோம சேகர், ஓசூர் ஆன்லைனிடம் கூறும்பொழுது, இந்த வரலாற்றுச் சின்னத்தின் மீது பூசப்பட்டுள்ள வெள்ளை நிற வேதிப்பொருள் கலவையை அகற்றி, கலையின் உண்மையான தன்மையை வெளிக் கொணர்வதற்கு, சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்றும், தன்னார்வலர்கள் யாராவது, உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உதவும் மனம் உள்ளவர்கள், உங்கள் தனிப்பட்ட முயற்சியில், திரு சோம சேகர் அவர்களை தொடர்பு கொண்டு, அரசு அலுவலர்களின் அனுமதியுடன், ஆலயத்தை புதுப்பொலிவு பெற முயற்சிகள் மேற்கொள்ள ஓசூர் ஆன்லைன் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.








