ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில்!. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களின் அமைச்சர்கள் கட்டிய கோவிலா இது?. அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஒய்சாளர்கள்கட்டிய கோயிலா இது?. பாழடைந்து கிடந்த கோவிலை, புனரமைத்து, நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில், மலை பாங்கான பாறைகளின் உச்சியில், பழமையான கோவிலை 2004 ஆம் ஆண்டு வாக்கில் புனரமைத்து, கோபுரங்கள் கட்டி, நாள்தோறும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இக்கோவிலின் சிறப்பு, மூலவர் நரசிம்மர், லட்சுமி நரசிம்மராக பாறை குகைக்குள் எழுந்தருளியுள்ளார்.
வரவேற்பு மண்டபத்தில் உள்ள தூண்களில் ஒன்றில், மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மீன் சின்னம் பாண்டியர்களின் அடையாளம் என்பதால், பாண்டியர்கள் கட்டிய கோவிலாக இது இருக்கலாம் என கருத்து நிலவுகிறது.
கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பழமையான சிற்பக் கலை தூண்களைக் கொண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இங்கு தூண்களில் உள்ள சிற்பக் கலைகள் நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றன. நரசிம்மர் ஒன்பது வடிவங்களில் ஒரு தூணில் காட்சி தருகிறார். சில தூண்களில் பாலியல் சீண்டல் தொடர்பான கலை நயத்துடன் கூடிய வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு தூணில் குதிரை, ஒட்டகம், ஆமை, மீன், வாத்து, போன்ற விலங்குகளின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வரவேற்பு மண்டபத்திற்கு பின்புறம், சிற்பக்கலை அல்லாத தூண்களைக் கொண்டு மற்றொரு மண்டபம் உள்ளது. மூலவர் வீற்றிருக்கும் இடத்திற்கு நேர் மேலாக, மற்றொரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
வரவேற்பு மண்டபத்தில் இருந்து சிறிய படிக்கட்டு வழியாக, கீழ்தளத்திற்கு சென்றால், அங்கே மீண்டும் மண்டபம் போன்ற அமைப்பு உள்ளது. இந்த படிக்கட்டின் சிறப்பு, அது இடத்திற்கு ஏற்ப குறுகியதாக இருப்பினும், இரண்டு வழி பாதையாக, இரண்டு திசைகளைக் கொண்டதாக உள்ளது.
கீழ்தளத்தில் உள்ள மண்டபத்தில், கருடாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் போன்ற ஆழ்வார்களின் சிலைகள் உள்ளன.
ஆழ்வார் சிலைகளுக்கு அருகே, சிறிய நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலின் முகப்பில், "கஜலட்சுமி", தாமரை இதழ்களின் மீது அமர்ந்திருக்க, இரண்டு யானைகள் அவள் மீது தண்ணீர் ஊற்றுவது போல எழுந்தருளியுள்ளார்.
குகைக்குள் ஊர்ந்து நுழைந்தால், அங்கு ஒரு சிறிய மண்டபம் உள்ளது. பாறைகளைக் குடைந்து இந்த மண்டபத்தை அமைத்துள்ளனர். உள்ளே, மேற்கொண்டு ஒரு குகை போன்ற அமைப்பிற்கு இடையே, "நரசிம்மர்", லட்சுமி நரசிம்மராக காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலை கட்டியது எட்டாம் நூற்றாண்டு பாண்டியர்களா? அல்லது பத்தாம் நூற்றாண்டு பல்லவர்களா? அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டு ஒய்சாளர்களா? என்கிற கேள்வி, கட்டிடக்கலையின் குறிப்புகளை கண்டறியும் போது நமக்குள் எழுகிறது.
பொதுவாக ஒய்சாளர்கள் குகைகளுக்கு இடையே கோவில் கட்டியதாக வேறு எங்கும் சுவடுகள் இல்லை. அவர்கள் வெளிப்புற சமவெளிகளில் மட்டுமே கோவில் மற்றும் மண்டபங்கள் கட்டியுள்ளனர். அதே வேளையில், கஜலட்சுமி வடிவம், பல்லவர்கள் மற்றும் ஒய்சாளர்களின் சிற்பக் கலையின் ஒரு பகுதி.
பாண்டியர்களை பொருத்தவரை, பாண்டிய அமைச்சர், எட்டாம் நூற்றாண்டு வாக்கில், மதுரை யானைமலை மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு இடங்களில் குகைகளில் லட்சுமி நரசிம்மர் கோவில் கட்டி உள்ளார்.
பாண்டியர்களுக்கு பாலியல் அடிப்படையிலான சிற்பங்களை கோவில் வளாகங்களில் வடிவமைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இந்த கோவிலில், பாலியல் சீண்டல் தொடர்பான சிலைகள் பல தூண்களில் காண இயல்கிறது.
நரசிம்மரின் ஒன்பது வடிவங்களை கொண்ட தூணும் உள்ளது. ஆந்திர மாநிலம் அகோலிபத்திலும், பல்லவர்கள் கட்டிய கோவில் உள்ளது. கஜலட்சுமி சிற்பங்களும் பல்லவர்கள் கட்டிடக்கலையில் ஒன்று. ஓசூர் அடுத்த அத்திமுகத்தில், பல்லவர்கள் கட்டிய சிற்றாலயம் உள்ளது.
ஆகவே, பெரும்பாலும் இந்த கோவிலை, பல்லவர்கள் அல்லது ஒய்சாளர்கள் கட்டியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வரலாற்று வல்லுநர்கள், அகழாய்வு மேற்கொண்டால் மட்டுமே இக்கோவில் எவ்வளவு பழமையானது என்கிற தெளிவான தகவல் கிடைக்கும். ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்டது இக்கோவில் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
ஆலயத்தின் முகப்பிலிருந்து, மூலவர் வீற்றிருக்கும் இடம் வரை ஒவ்வொரு நுழைவாயிலிலும், ஆகம விதிகளின்படி துவார பாலகர் என்கிற நுழைவாயில் காப்பாளர்கள் சிலைகள் உள்ளன. சிதிலமடைந்து மீட்கப்பட்ட கோவில் என்பதால், ஆகம விதிகளின்படி குளம் மற்றும் மரம் கண்டறிய முடியவில்லை.
மதுரை நாயக்கர்கள், பிரிட்டிஷார், மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே, மைசூர் - மதுரை போர், ஜவளகிரி - தேன்கனிக்கோட்டை ஆகிய ஊர்களின் வழியாக நடைபெற்றுள்ளது. இருப்பினும், இக்கோவிலின் மீது அவர்களின் மோதல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை.
கோவில் காலை ஏழு மணி முதல் 9 மணி வரை நாள்தோறும் திறந்திருக்கும். யானைகள் நடமாடும், தேன்கனிகோட்டைக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், குழுவாகச் செல்வது பாதுகாப்பானது.
▶️ Watch the FULL video with complete history here:
https://youtu.be/Psrnxyz5034








