தமிழ்நாடு மீனவர்களின் சிங்கள கடற்படை உடனான மோதலும்... பின்னணியும்...

தமிழ்நாடு மீனவர்களின் சிங்கள கடற்படை உடனான மோதலும்... பின்னணியும்...

தமிழ்நாடு மீனவர்கள்,  சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக, நடுக்கடல் பகுதியில் இலங்கை சிங்கள கடற்படையினரால்,  தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்த செய்தி.

துவக்க நாட்களில், தமிழ்நாடு மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்படுவது என்பது, ஒரு இனத்தின் மீதான தாக்குதல் என்பதாக தமிழ்நாட்டில் செய்தி பரப்பப்பட்டு வந்தது.  இதற்காக பல அரசியல் கட்சிகள் பல விதமான ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாட்டில் ஈடுபட்டனர்.

தீர்வாக, தமிழ்நாடு தமிழ் மீனவர்களுக்கு, அடையாள அட்டைகளும், அவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி படகின் மீது இந்திய நாட்டின் கொடி பறக்க விடவும் என பல்வேறு நடவடிக்கைகளை, அன்றைய ஒன்றிய அரசு மேற்கொண்டு முயற்சித்தது.  இருப்பினும் இன்றைய நாள் வரை, சிங்களப்படையினர், தமிழ்நாடு தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது.

எதனால் தாக்கப்படுகிறார்கள்?:  ஒரு இனத்தின் மீது மற்றொரு இனம் நடத்தும் தாக்குதல் என அரசியல் செய்யப்பட்ட இந்த மீனவர்கள் மீதான தாக்குதல், நாளடைவில், இலங்கை ஈழ தமிழ் மீனவருக்கும், தமிழ்நாடு தமிழ் மீனவருக்கும் மீன் பிடித்தல் தகராறு என்பதும், சட்டத்திற்குப் புறம்பாக, தமிழ்நாடு தமிழ் மீனவர்கள், இலங்கை கடற் பகுதியில் செயல்படுகிறார்கள், அதனால் தாக்குதல் நடைபெறுகிறது என்பது பின்னாளில் விளங்கியது.  இந்த மோதல் போக்கு ஏன் என்பது குறித்து இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

கள்ளக்கடத்தல்:  தமிழ்நாட்டிலிருந்து, புளி, மிளகு, மிளகாய் வற்றல் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் என அனைத்தையும் மீன் பிடிப்பவராக தம்மைக் காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டம், இலங்கைக்கு கடத்திச் செல்கிறது.  அதுமட்டுமல்ல, போதைப் பொருட்களை கடத்துவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.  இவ்வாறு கடத்துபவர்கள், கொடுக்கல் வாங்கல் சிக்கல் ஏற்படும் பொழுது, ஒருவரை ஒருவர், கடற்படையினருக்கு தகவல் கொடுத்து சிக்க வைக்கின்றனர்.

மீன்பிடித் தொழிலில் அடிப்படை முறையீடு:  தமிழ்நாடு தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கும் விதமே கொடூரமானது.  அவர்கள் சுருக்கு மற்றும் இரட்டை மடி என்று சொல்லப்படுகின்ற, சட்டத்திற்குப் புறம்பான மீன் வலை பயன்படுத்தி, கிட்டத்தட்ட கடலில் வாழும் அனைத்து உயிரினங்களையும் அழிப்பதற்கு ஈடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.  எத்தனை வகை சட்டங்கள் நடைமுறைப்படுத்தினாலும், அதை மீற வேண்டும் என்பது அவர்கள் கடமையாக - தம் பிறப்புரிமையாக கருதுகின்றனர்.

இலங்கை தமிழ் மீனவர்கள், தங்கள் பகுதி கடல் பாழ் படுவதை விரும்புவதில்லை.  சிங்கள கடற்படை துணைகொண்டு தமிழ்நாடு தமிழ் மீனவர்களை விரட்டி அடிக்க ஆவண செய்கின்றனர்.

தீர்வுதான் என்ன?:  தமிழ்நாடு தமிழ் மீனவர்கள், முறைகேடான மீன்பிடி பழக்கவழக்கங்களை முதலில் கைவிட வேண்டும்.  இந்திய ஒன்றிய அரசு, தமிழ்நாடு தமிழ் மீனவர்களுக்கு, ஆழ் கடலில் சென்று மீன் பிடிப்பதற்கான பயிற்சிகளையும், அதற்கான பண உதவிகளையும், அவர்கள் பிடித்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளையும் அமைத்துத் தருவது.  

தமிழ்நாடு அரசியல் கட்சிகள், குற்றம் செய்தால் யாராகிலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதைத் தமிழ்நாடு தமிழ் மீனவர்களிடம், தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள், தமிழ்நாடு மீனவர் ஏன் தாக்கப்பட்டார்கள் என்பதை குறித்து தெளிவாக விளக்க வேண்டுமே ஒழிய, இரக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, அதற்கு ஏற்ப செய்தியை மாற்றி வெளியிட கூடாது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: