மந்தை என பெரும்பாலான இன்றைய கற்கும் இளைய சமூகம் மற்றும் அவர்களின் பெற்றோர், மருத்துவம் பயில்வதே பகட்டான மற்றும் பழுவற்ற வேலைவாய்ப்பை தரும் என மனதளவில் நம்பி, பொறியியல் படிப்புகளை தவிர்த்துவிட்டு, மருத்துவம் பயில்வதற்காக... வெளிநாட்டு படிப்புகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? என்பதை கூட அறியாமல், நாடு நாடாக அலைந்து திரிகின்றனர்.
இதை நாள்தோறும் செய்திகளை அறிய நேரிடும் பொழுது, எமக்கு மனதில் எழுந்த கேள்வி, கல்வி என்பது மருத்துவக்கல்வி மட்டும்தானா? வருவாயை உண்மையிலேயே மருத்துவ கல்வி பெரிய அளவில் ஈட்டி தருகிறதா? இவற்றுக்கு மாற்று அல்லது உயர்ந்தது என எதுவும் இல்லையா?
இத்தகைய கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டு, அதற்கு விடை தேடிய பொழுது, "மருத்துவ கல்வி vs பொறியியல் கல்வி" ஒரு ஒப்பீடு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
மருத்துவ கல்வி vs பொறியியல் கல்வி:
மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, அது மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர் - செவிலியர் துவங்கி, மருத்துவர் வரை, கற்பிக்கும் சூழல், முழுக்க முழுக்க, நேரடி களப்பணி சார்ந்ததாக அமைகிறது. அதேவேளையில், பொறியியல் கல்லூரிகள், கல்விக் கூடங்களாக மட்டுமே திகழ்கின்றனவேயொழிய, தொழிற்கூடங்கள் சார்ந்து இயங்குவது இல்லை. பெரும்பாலான பொறியியல் மாணவர்கள், தாங்கள் பணி செய்யக்கூடிய இடத்தை, வேலை தேடி அலைகின்ற பொழுதே, வெளியிலிருந்தாவது காண்கின்றனர்!
அதேபோன்று, மருத்துவம் என்பது, செய்கின்ற பணியில், திறனில் தொய்வு இருந்தாலும் வெளிப்படையாக பிறரால் அறிந்து - புரிந்து கொள்ள இயலாது. ஆனால் பொறியியல் கற்ற பொறியாளர், அவர் செய்கின்ற பணியின் வெளிப்பாட்டைக் கொண்டு, திறன் மிக்கவராக, அறிவு சார்ந்தவராக பிறரால் உடனடியாக உணர முடியும்... அறிய முடியும்.
இந்த பெரிய அளவிலான கற்பிக்கும் சூழல் வேறுபாட்டால் தான், பொறியியல் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு அமைவதிலும், தாம் கற்றது என்ன என்பதை புரிந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
பெரிய அளவிலான வருவாய்:
+2 படித்த ஒருவர், பொறியியல் கல்வியை நான்கு ஆண்டுகளில் முடித்துவிடலாம். சிறந்த கல்லூரிகளில் பயின்றவர்கள், எளிதாக, திங்கள் ஒன்றுக்கு, ரூபாய் 50,000-கும் கூடுதலாக வருவாய் கிடைக்கும் பணியில் சேர்ந்து விடலாம். இவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில், மேற்படிப்பு எதுவும் இல்லாமலேயே, திங்கள் ஒன்றுக்கு, ரூபாய் 100,000-கும் கூடுதலாக வருவாய் ஈட்டுவர்.
+2 படித்த ஒருவர், மருத்துவர் ஆக வேண்டுமாயின், அவர் ஐந்தரை ஆண்டுகள் அலோபதி மருத்துவம் பயில வேண்டும். இப்படி பயின்று வருபவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில், Duty Doctor என்கிற பதவி கிடைக்கும். இவர்களுக்கு திங்கள் ஒன்றுக்கு, ரூபாய் 25,000 மட்டுமே வழங்கப்படும். வேலை நேரங்கள் மற்றும் பழு கூடுதலாக இருக்கும். இவர்கள், மேற்கொண்டு போட்டித் தேர்வுகள் எழுதி, அவற்றில் உயர்நிலை மதிப்பெண்கள் பெற்றால் தான், உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பொதுவாக, ஒரு மருத்துவர், நிலையான வருவாய் ஈட்டும் நிலையை எட்டுவதற்கு, 35 வயதாகி விடும். அதேவேளையில், பெற்றோர், தலை சிறந்த - புகழ்பெற்ற மருத்துவராக இருப்பின், அந்தச் சூழல்கள் முற்றிலும் வேறு!
பொறியியல் கல்வியில் எதைக் கற்பது?
2022 ஆண்டு, பொறியாளர்களின் வருவாய் நிலையைக் கொண்டு, உலக அளவிலான பல தரப்பு ஆய்வு மேற்கொண்டதில், பெரிய அளவிலான வருவாயைத் தரும் பொறியியல் துறைகள்:
1. Enterprise cloud architect
2. Security architect
3. Data scientist / architect
1. Enterprise cloud architect (தொழில்-தரத்தில் தரவு-நடுவ வடிவமைப்பாளர்)
பதவியின் பெயரைக் கொண்டே நாம் புரிந்துகொள்ளலாம், இந்தப் பணி, தரவு நடுவம் (Data Center) / வழங்கி தொழில்நுட்பம் (Server Technology) சார்ந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், பெரும்பாலான செயலிகள் (Apps) மற்றும்
மென்பொருட்கள் (Software), தனிநபர் கணினிகளில் நிறுவப்பட்டு, அவை செயல்படும். இவற்றினால், நச்சு நிரல்கள் (Virus) மற்றும் மென்பொருள் களவு (Piracy) இடர்பாடுகள், உற்பத்தியாளர்களை பெருமளவில் பாதித்து வந்தது. இவற்றுக்கெல்லாம் தீர்வாக, இன்றைய தொழில்நுட்பத்தில், மென்பொருளின் அடிப்படைச் செயல்பாடுகள் தனிநபர் கணினியிலும், கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் தரவு நடுவங்களிலும் நிறுவப்படுகின்றன. இதனால், மேற்குறிப்பிட்ட இரண்டு இடர்பாடுகளும் இயன்றவரை தீர்க்கப்படுகின்றன. இணையவழி பயன்பாடு, மக்களிடம் பரவி இருப்பதால், இந்த புதிய தொழில்நுட்பம் வாய்ப்பாகிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படை தேவை cloud servers. அதாவது, திறன்வாய்ந்த வழங்கிகள் (servers) பல ஓரிடத்தில் கட்டமைக்கப்பட்டு, அவை வாடிக்கையாளரின் தேவையின் பொருட்டு, பிரித்து வழங்கப்படுகிறது. இதனால், ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் கட்டமைப்பு செலவினங்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. மேலும், பயனரின் தரவுகள் (User Data), பாதுகாப்பாக, காப்பு நகல் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது.
இத்தகைய தரவு வழங்கி நடுவங்களை, கட்டமைப்பதற்கான வல்லுனர்கள் தேவை, நாளுக்கு நாள் கூடுதலாகிக் கொண்டே போகிறது. கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் இடையே ஊதியத்தை ஒப்பிட்டால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிக உயர்வு. இந்தியாவில் இவர்கள் ஆண்டொன்றுக்கு ரூபாய் 30 இலட்சத்திற்கும் கூடுதலாகவும், அமெரிக்கா போன்ற நாடுகளில் ரூபாய் ஒன்னேகால் கோடிக்கும் மேலாக வருவாய் ஈட்டுகின்றனர்.
2. Security architect (பாதுகாப்பு வடிவமைப்பாளர்கள்):
இணைய பயன்பாடு நாளுக்கு நாள் மக்களிடையே பெருகி கொண்டிருக்கும் இந்த சூழலில், இணைய பாதுகாப்பு என்பது ஒரு கட்டாயத் தேவையாக அமைகிறது. இதனால் இந்த தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அனைத்து சிறியவை முதல் பெரிய நிறுவனங்களும் பாதுகாப்பு வடிவமைப்பாளர்கள், பல நிலைகளில் பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த பணிகளுக்கு, சான்றிதழ் சார்ந்த கல்வி கற்றல் இருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. பெரிய அளவிலான பொறியியல் மேற்படிப்புகள் இந்த பணிகளுக்கு அடிப்படைத் தேவையாக அமைவது இல்லை.
API, Agile, DevOps, Security+ போன்றவற்றில் தேர்ச்சி அல்லது பயிற்று சான்றிதழ் இருந்தால், இந்த பணிகளில் சேருவதற்கு போதுமானதாக இருக்கிறது.
இவர்களுக்கு இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு, ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் வழங்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளை பொருத்தவரை, இந்த பணியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு, ரூபாய் மதிப்பில் 90 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
3. Data scientist / architect (தரவு அறிவியலாளர் / வடிவமைப்பாளர்)
கணினி பயன்பாடு என்றாலே, அங்கே தரவுகள் முறையாக மற்றும் வேகமாக கையாளப்பட வேண்டும்.
இந்த துறையில் பணி செய்ய ஆர்வமுள்ளோர், தரவு நடுங்கள் (Data Centers) குறித்த அடிப்படை ஆற்றலும், பாதுகாப்பு முறைகள் குறித்த அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும்.
இவர்கள் தரவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது (Data Analysis), தரவுகளை கையாள்வதில் நிகழ்நிலையில் பல செயல் முறைகளை மேற்கொள்வது (Experimenting data handling online), பயனர்களுக்கான மற்றும் மென்பொறியாளர்களுக்காக பல முகப்புகளை ஏற்படுத்துவது (Building dashboards for users and software engineers) என பல முனைகளைக் கொண்டிருக்கும்.
இவர்கள் ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவில் ரூபாய் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவர். இவர்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் மதிப்பில் 60 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இறுதியாக...
பொறியியல் துறை வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை, அவை முற்றிலும் தனிநபரின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டது. அறிவாற்றல் கொண்டவர்கள் எளிதாக பொறியாளராக வெற்றிபெறலாம்.
கல்வி என்பது அறிவை வளர்க்க... வருவாயை ஈட்டுவதற்கு ஒரு வழி என இருக்கக் கூடாது என்பதை மாணவர்களும் பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும்.











