மின் சேமிப்பு வழிமுறைகள்

மின் சேமிப்பு வழிமுறைகள்

வேனிற்காலம் துவங்கிவிட்டது.  காற்று பதப்படுத்தி (Air Conditioner) பயன்படுத்தும் தேவையும் கூடுதல் ஆகிவிடும்.  இதனால், சுமார் 70% வரை கூடுதல் மின் செலவினம் ஏற்படும்.  தமிழ்நாட்டைப் பொருத்தவரை, காற்று பதப்படுத்தி பயன்படுத்துபவர்களின் கட்டணம், மிகக் குறைந்த அளவு என்றால் கூட, 2 திங்கள்களுக்கு, ரூபாய் 3000 என தொட்டுவிடும்.

குளிர்காலங்களில், Geyser பயன்பாடு மின் தேவையை கூடுதலாகும்.  அதற்கு எளிதான தீர்வாக, ஞாயிறு ஒளி மூலமாக தண்ணீரை சூடாக்கும் கருவிகள் (Solar Water Heater), சுமார் ரூபாய் 30 ஆயிரம் செலவில் 4 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு நிறுவி விடலாம்.

ஆனால், AC யை பொருத்தவரை, அதன் மின் பயன்பாடு கூடுதலாக இருப்பதால், ஞாயிறு ஒளி மூலமான (Solar Panel) மின் உற்பத்தி என்பது வாய்ப்பற்றதாக இருக்கிறது.  மேலும், இரவு நேர பயன்பாட்டிற்கு, மின்கலன்கள் (Battery) மூலம் மின்சாரத்தை சேமித்து வைக்க முயன்றால், அதற்கான செலவினங்கள் விண்ணைத்தொடும்.  போட்ட முதலுக்கும், மின் கட்டணத்தில் சேமிக்கின்ற பணத்திற்கும், எவ்வகையிலும் ஈட்டிவிட இயலாது.

ஏசியின் தேவையை கட்டுப்படுத்துவதன் மூலம், மின் கட்டணத்தைக் குறைக்கலாம் என்பது தெளிவாகிறது. "எவ்வாறு காற்று பதப்படுத்தியின் தேவையை குறைப்பது?"  என்கிற இந்த ஒற்றை கேள்விக்கான பதில், "வீட்டை மாற்று வழிகளில் குளிர்விப்பது" என்கிற ஒற்றை பதில்தான்.

மொட்டை மாடியை பொருத்தவரை, அங்கேதான் ஞாயிறு ஒளி நேரடியாக படுகிறது.  பெருமளவிலான வெப்பம் அங்கிருந்துதான், கட்டிடத்தின் உட்புறத்திற்கு ஊடுருவுகிறது.  மொட்டைமாடியில் நேரடியாக படும் ஞாயிறின் வெப்ப அளவை கட்டுப்படுத்துவதற்கான வழிகளான, முதலில் மாடித்தோட்டம், அடுத்ததாக Solar Panel குறித்து அறியலாம்.

மாடித்தோட்டம்


மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைப்பது, கட்டிடத்தின் மீதான வெப்பத் தாக்கத்தை பெரிதளவு குறைக்கும்.  மாடித் தோட்டம் அமைப்பதால், பிற்பகல் வேளையில் பத்து டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு, வீட்டினுள் வெப்ப அளவு குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மாடி தோட்டம் அமைப்பதில் இரண்டு வகையாக அதை மேற்கொள்ளலாம். இரண்டிற்குமான முதலீட்டில், வேறுபாடுகள் பெரிய அளவில் இல்லை.  சுமார் ரூபாய் 30 ஆயிரம் செலவு செய்தால், 1000 சதுர அடிக்கு மாடித்தோட்டம் அமைத்து விடலாம். மாடித்தோட்டம் அமைக்கும் பொழுது, இதுதொடர்பாக அனுபவம் கொண்டவர்கள் அறிவுரை கேட்டு அமைக்க வேண்டும்.  இல்லையேல், கட்டிடத்தை பாதிக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ள வேண்டும்.

முதல் வகை மாடி தோட்டம்

காய்கறிகளை விளைவிக்கும் மாடித்தோட்டம்.  இதன் மூலம் தீய நச்சுக்கள் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் வீட்டின் தேவைக்கு கிடைக்கும் என்றாலும், மனித உழைப்பு நேரம், இதற்கு கூடுதலாக தேவைப்படும்.  நாள்தோறும் இதை பேண வேண்டும்.  அதற்கு ஏற்ப, காய்கறி விளைவித்த பலன் கிடைக்கும்.  காய்கறித் தோட்டத்திற்கு இடையே, சிறிய வகை மரங்களையும் எளிதாக வளர்க்கலாம்.  

தமிழ்நாட்டின் வேனிற்கால வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் நிலையைப் பொறுத்தவரை, தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், அவரக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம், கீரை வகைகள் என வீட்டின் தேவைக்கான காய்கள் மொட்டைமாடியில், பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை எளிதாக வளர்க்கலாம்.

இதற்கு 12 அங்குலம் கொண்ட தொட்டிகள் அல்லது பைகள் பயன்படுத்தலாம்.  குறைவான அளவு கொண்ட தொட்டிகள், வெயில் படும் பொழுது, வெப்பத்தைச் செடியின் வேர்களில் தாக்க வழிவகை செய்யும்.

சிறிய வகை மரங்களான, சப்போட்டா, மாதுளை, கொய்யா, சிறிய வகை மா,  முருங்கை, கருவேப்பிலை போன்றவற்றை 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் அல்லது பீப்பாய்கள் அல்லது பைகளில் வளர்க்கலாம்.

இரண்டாம் வகை மாடி தோட்டம்

மாடித் தோட்டத்திற்கு நேரம் ஒதுக்க இயலாது என்று கூறுபவர்களுக்கு இந்த இரண்டாம் வகை மாடித்தோட்டம் சிறந்ததாக இருக்கும்.

இவ்வகை மாடித்தோட்டத்தில், கற்றாழை வகைகள், புல், தரையில் படரும் பூச்செடிகள் (டேபிள் ரோஸ் வகைகள்) என எளிதாக வளர்க்கக்கூடிய செடி வகைகளை வளர்க்கலாம்.  இவ்வகை தோட்டத்திற்கு இடையே, மேற்சொன்ன சிறிய வகை மரங்களை வளர்க்கலாம்.

Solar Panel


மொட்டை மாடியில் வீட்டின் தேவைக்கு ஏற்ற அளவிற்கு மட்டும் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இல்லை.  Solar Panel மூலம் மின் உற்பத்தி செய்து அதை தமிழ்நாடு மின் வாரியத்திற்கு கொடுக்கலாம்.  இதற்கு குறைந்த அளவு 1kW Solar Panel நிறுவ வேண்டும்.  சுமார் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் சற்று கூடுதலான முதலீடு தேவைப்படும்.  இதற்கு மின்வாரிய உதவி பொறியாளரை தொடர்புகொண்டு அனுமதி பெற வேண்டும்.  மின்வாரியத்தில் இருந்து, Net Meter பொருத்தி தருவார்கள்.  இவ்வகை அளவீட்டு கருவிகளில், நாம் மின் உற்பத்தி செய்து மின் வாரியத்திற்கு அனுப்பும் பொழுது, அளவீடு குறையும், தேவைக்கு மின்வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்தினால், அளவீடு கூடும்.  

இப்படி, Solar Panel பொருத்துவதன் மூலமும் மொட்டைமாடியில் வெப்பத்தின் நேரடி தாக்கத்தை குறைத்து வீட்டினுள் வெப்பத்தின் அளவை குறைக்கலாம்.

மின் கட்டணத்தில் சேமிப்பு


வேனிற்காலத்தில், பிற்பகல் வேளைகளில், கட்டிடத்தினுள் சுமார் 10 டிகிரி சென்டிகிரேட்  (22F) அளவிற்கு மாடித் தோட்டம் அமைப்பதால் வெப்பம் குறைகிறது என உறுதியாக சொல்லலாம்.  காலை மற்றும் மாலை வேளைகளில், சுமார் 3 டிகிரி சென்டிகிரேடு அளவிற்கு மாடித்தோட்டம் கட்டிடத்தின் உட்புற வெப்பத்தை குறைக்கிறது.

மொட்டை மாடியை தாக்கும் நேரடி வெப்பத்தை குறைப்பதன் மூலம், காற்று பதப்படுத்தியின் (AC) தேவையை 60% அளவு குறைத்துவிட இயலும்.  இதன் மூலம், 50% வரை மின் கட்டணத்தில் சேமிப்பு கிடைக்கிறது என்கின்றனர் மாடித்தோட்டம் அமைத்து அனுபவம் கொண்டவர்கள்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: