பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என ஐந்து திங்கள் தமிழ்நாட்டைப் பொருத்தவரை வெப்ப ஊழி ஆகும். இந்த கோடை திங்கள்களில், மொட்டை மாடியில் செடி வளர்ப்பதன் மூலம், வெயில் வெப்பத்தின் கொடூர தாக்குதலில் இருந்து, சற்று தப்பிக்கலாம். இந்த நாட்களில் என்னென்ன செடிகள் மொட்டை மாடியில் பயிரிடலாம் என்பது குறித்து ஒரு பார்வை.
1. பச்சை மிளகாய்
செடி நடவு செய்த 60ம் நாள் முதல் மிளகாய் தர துவங்கும். ஐந்து செடிகள் நட்டு இருந்தால் ஏழு நாட்களுக்கு ஒரு முறை சுமார் 250 கிராம் மிளகாய் பறிக்கலாம். தொடர்ந்து ஐந்து - ஆறு திங்கள்களுக்கு பலன் தரும்.
தொட்டி:
வீட்டில் பச்சை மிளகாய் செடி வளர்ப்பதற்கு, பெரிய அளவிலான தொட்டி வேண்டும் என்பது இல்லை. குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் MUG அளவிற்கான ஒரு குவளை கிடைத்தால் கூட போதும்.
மண் ஆயத்தப்படுத்துதல்:
சிறிய அளவிலான தொட்டியை (6 இன்ச்) பயன்படுத்த போகிறீர்கள் என்றால், மண்ணை ஆயத்தப்படுத்தும் பொழுது, போதிய அளவு தேங்காய் நார் மற்றும் சிறிதளவு மண், அடுப்புக்கரி, அதனுடன் தொழு உரமிட்டு, தொட்டிக்கு முக்கால் பங்கு அளவிற்கு நிரப்புங்கள். கடற்பாசி கிடைத்தால் அதையும் 1 - 2 கிராம் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய் நாற்று நட்டு, நன்கு வெயில் படும்படியான இடத்தில் தொட்டி இருக்க வேண்டும். மண் காய்ந்து விடாமல், பார்த்து போதிய அளவு தண்ணீர் ஊற்றுங்கள். படத்தில் உள்ள மிளகாய்ச் செடி, 6 இன்ச் விட்டம் கொண்ட தொட்டியில் வளர்க்கப்பட்டது.
உரம்:
ஏழு நாட்களுக்கு ஒரு முறை, லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில், மெக்னீசியம் சல்பேட் தண்ணீரில் கரைத்து செடிகளின் இலை வழியே ஊற்றுங்கள். ஏழு நாட்களுக்கு ஒரு முறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் NPK 19-19-19 என்ற அளவில் கரைத்து இலைகளின் வழியே ஊற்றுங்கள்.
செடிகளில் காய் பிடிப்பதற்கு, நுண் ஊட்டச்சத்துக்கள் (Micro Nutrients) கண்டிப்பாக தேவை. ஏழு நாட்களுக்கு ஒரு முறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒரு கிராம் என்கிற அளவில் நுண் ஊட்டச்சத்தை கரைத்து செடிகளின் இலை வழியே ஊற்றுங்கள்.
உரம் இடுவதற்கு, கண்டிப்பாக ஒரு நாள் இடைவெளி தேவை. வெள்ளை மாவுப்பூச்சி தாக்குதல் வராமல் இருப்பதற்கு அவ்வப்பொழுது இலைகளின் அடிப்பகுதியில் படும்படியாக வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும். ஏழு நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது போதுமானதாக இருக்கும்.
2. தக்காளி :
நான்கு அல்லது ஐந்து செடி இருந்தால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமானது. செடியை நடும்பொழுது ஐந்து அடி உயரத்திற்கான ஒரு மூங்கில் குச்சியையும் சேர்த்து நடுங்கள். செடி வளர வளர.... செடியை தொடர்ந்து முறையாக குச்சியில் இலையின் கீழ் பகுதியை சணல் கயிறு கொண்டு கட்டி விடுங்கள்.
தொட்டி:
தக்காளி செடியை, தரையில் நடுவதற்கு பதிலாக, தொட்டியில் வளர்ப்பது ஆகச் சிறந்தது. பொதுவாக 12 இன்ச் விட்டமுள்ள தொட்டியை பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும். தொட்டியை தரை நிலையில் வைக்காமல், சுற்று சுவரில் வைத்தால், செடி உயரமாக வரும்பொழுது, அதற்காக குச்சி வைத்து கட்டி வர வேண்டிய தேவை இருக்காது.
பொதுவாக தக்காளி செடிகள் 4 அடி முதல் 5 அடி வரை வளரும். அதன் தண்டு திடமாக இல்லாததால், செடி சரிந்து வளரும். செடி சரிந்து மண்ணில் பட்டால், காய்கள் பிடிக்காது.
மண் ஆயத்தப்படுத்துதல்:
மண்ணை ஆயத்தப்படுத்தும் பொழுது, தேங்காய் நார், மண், தொழு உரம் ஆகியவை கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும். நாற்று நடும் பொழுது, சற்று ஆழமாக நடுங்கள். மேம்போக்காக நட்டால், செடி வளரும் பொழுது வேருடன் சரிவதற்கு வாய்ப்பு உள்ளது.
சுற்றுச் சுவற்றின் மீது தொட்டியை வைப்பதால், செடி மேலிருந்து கீழாக வளரும். நல்ல பயன் தரும்.
உரம்:
தக்காளியை பொறுத்தவரை பெரிதளவு உரம் தேவையில்லை. வீட்டில் அரிசி - பருப்பு - காய் கனிகள் கழுவும் தண்ணீரை ஓடையில் ஊற்றாமல், தக்காளி செடிக்கு ஊற்றுங்கள். தண்ணீரை அளவாக ஊற்ற வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றினால் காய் பிடிப்பது சிரமம்.
3. கத்திரி :
இரண்டு செடி இருந்தால் ஒரு வீட்டிற்கு போதுமானதாக இருக்கும். நன்றாக தொழு உரம் இட்டு செடியை நடவு செய்யுங்கள். முறையாக செடியைப் பேணி வந்தால், தொடர்ந்து ஓராண்டு வரை பலன் தரும்.
தொட்டி: கத்தரிக்காய் செடி தரையில் வளர்ப்பது ஆகச் சிறந்தது. தொட்டியில் வளர்க்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால், 18 - 24 இன்ச் அளவிற்கான தொட்டியை பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்.
தேங்காய் நார், தோட்டம் மண், தொழு உரம், கடற்பாசி ஆகியவை கலந்து ஆயத்த படுத்தப்பட வேண்டும். செடியை நன்கு வெயில் உள்ள பகுதியில் நடுதல் சிறந்த பயன்தரும். மண் காய்ந்து விடாமல், போதிய அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
உரமிடுதல்:
மெக்னீசியம் சல்பேட், நுண் ஊட்டச்சத்துக்கள், NPK 19-19-19 ஆகிய உரங்களை, தண்ணீர் லிட்டர் ஒன்றுக்கு ஒரு கிராம் என்ற அளவிலிருந்து, செடியின் வளர்ச்சிக்கு தக்கவாறு, சற்று கூடுதலாக்கி 2.5 கிராமிற்கு மிகாமல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை, ஒரு உரத்திற்கும் மற்றொரு உரத்திற்கும் ஒரு நாளாவது இடைவெளிவிட்டு செடியின் இலைகளில் படும்படியாக ஊற்ற வேண்டும்.
அவ்வப்பொழுது மேல் மண்ணை பிரட்டி விட வேண்டும். மேல் மண்ணில் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். களைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால், செடி நன்றாக வளரும்.
தொற்று:
மாவு பூச்சிகளின் தொல்லை, கத்திரிக்காய் செடியை பொருத்தவரை அதன் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். தடுப்பதற்கு, நடவு செய்த 15-ம் நாள் ஏழு நாட்களுக்கு ஒரு முறை வேப்பம் எண்ணெய் இலைகளின் அடியில் படும்படியாக தெளித்து வரவேண்டும்.
4. வெண்டை :
10 செடி நட வேண்டும். ஏழு நாட்களுக்கு ஒரு முறை சுமார் அரை கிலோ வெண்டை பறிக்கலாம். தொடர்ந்து நான்கு திங்கள்களுக்கு பலன் தரும். ஒரு செடி சுமார் 22 காய்கள் தரும். 4 முதல் 5 அடி வரை நீண்டு, கிளைகள் விட்டு வளரும்.
தொட்டி:
வெண்டைக்காயை பொறுத்தவரை தரை அல்லது தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். தொட்டிகள் 10 முதல் 12 இன்ச் விட்டம் உள்ளதாக இருந்தால் சிறப்பு.
மண் ஆயத்தப்படுத்தும் பொழுது, அடுப்புக்கரி, தேங்காய் நார், தோட்டம் மண், தொழு உரம், கடற்பாசி (ஒரு தொட்டிக்கு 2 கிராம் அளவிற்கு), சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவை கலந்து தொட்டியின் முக்கால் பங்கிற்கும் சற்று கூடுதலாக நிரப்ப வேண்டும். மண் காயாத படி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.
உரமிடுதல்:
மெக்னீசியம் சல்பேட், நுண் ஊட்டச்சத்துக்கள், NPK 19-19-19 ஆகிய உரங்களை, தண்ணீர் லிட்டர் ஒன்றுக்கு ஒரு கிராம் என்ற அளவிலிருந்து, செடியின் வளர்ச்சிக்கு தக்கவாறு, சற்று கூடுதலாக்கி 2.5 கிராமிற்கு மிகாமல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை, ஒரு உரத்திற்கும் மற்றொரு உரத்திற்கும் ஒரு நாளாவது இடைவெளிவிட்டு செடியின் இலைகளில் படும்படியாக ஊற்ற வேண்டும்.
அவ்வப்பொழுது மேல் மண்ணை பிரட்டி விட வேண்டும். மேல் மண்ணில் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். களைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால், செடி நன்றாக வளரும்.
5. முருங்கை :
தொட்டியில் வைத்து வளர்க்கத் தக்க முருங்கைச் செடிகள் கிடைக்கின்றன. முருங்கைக் கீரையும் கிடைக்கும் காயும் கிடைக்கும்.
தொட்டி:
தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால், அதற்கான ரகத்தை தேர்வு செய்து நடவேண்டும். தொட்டியின் அளவு குறைந்தது 2 அடி விட்டம், 3 அடி ஆழம் இருக்க வேண்டும்.
மொட்டை மாடியில் வளர்ப்பதாக இருப்பின், தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வடிவதற்கு ஏற்புடையதாக அமையுங்கள்.
மண் ஆயத்தப்படுத்தும் பொழுது, தேங்காய் நார், அடுப்புக்கரி, தோட்டம் மண் ஆகியவை சேர்த்து தொட்டியை தண்ணீர் நிற்பதற்கான உயர இடைவெளிவிட்டு நிரப்புங்கள்.
முருங்கை செடியை தொட்டியில் நடுவில் நடுவதால், மீதம் உள்ள பகுதிகளில், அரைக்கீரை - வல்லாரை - புதினா போன்றவற்றை ஊடுபயிராக வளர்க்கலாம்.
உரம்:
முருங்கை இலையை கீரையாக உண்ண விரும்புபவராக இருப்பின், நைட்ரஜன் சத்துள்ள உரங்களை இட வேண்டும். காய் நன்றாக காய்க்க வேண்டும் என்றால், தொழு உரம் இடவேண்டும்.
முருங்கை 5 அடிக்கு மேல் உயரம் வளரும் பொழுது, மேல்பகுதி கிளைகளை ஒடித்து வளர்த்தால் முருங்கை நல்ல பலனைத் தரும்.
6. கருவேப்பிலை :
முன்பு காய் வாங்கினால், கருவேப்பிலை விலை இல்லாமல் கொடுப்பார்கள். இப்பொழுது ஐந்து இலைகளைக் கொண்ட ஒரு கட்டிற்கு ஐந்து ரூபாய். எளிதாக வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம். ஒரு செடி இருந்தால் போதுமானது.
தொட்டி:
தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால், தொட்டியின் அளவு குறைந்தது 2 அடி விட்டம், 3 அடி ஆழம் இருக்க வேண்டும். மொட்டை மாடியில் வளர்ப்பதாக இருப்பின், தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வடிவதற்கு ஏற்புடையதாக அமையுங்கள்.
மண் ஆயத்தப்படுத்தும் பொழுது, தேங்காய் நார், அடுப்புக்கரி, தோட்டம் மண் ஆகியவை சேர்த்து தொட்டியை தண்ணீர் நிற்பதற்கான உயர இடைவெளிவிட்டு நிரப்புங்கள்.
செடியை தொட்டியில் நடுவில் நடுவதால், மீதம் உள்ள பகுதிகளில், அரைக்கீரை - வல்லாரை - புதினா - கொத்தமல்லி போன்றவற்றை ஊடுபயிராக வளர்க்கலாம்.
உரம்:
மெக்னீசியம் சல்பேட் மற்றும் யூரியா போன்ற உரங்கள் கருவேப்பிலை செடி நன்கு செழித்து வளர வழிவகை செய்யும். செடி பெரிதாக வளராமல் இருக்க அவ்வப்பொழுது கிளைகளை ஒடித்து வளர்க்க வேண்டும்.
7. உருளைக்கிழங்கு:
வளர்ப்பதற்கு எளிதான காய்கறிகளில் உருளைக்கிழங்கு ஒன்று. முளைவிட்ட உருளைக்கிழங்கு ஒன்றினை நட்டால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கை 100 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.
தொட்டி:
உருளைக்கிழங்கு நடவு செய்வதற்கு அகலமான அதே வேளையில் ஆழமான தொட்டியை தேர்வு செய்ய வேண்டும். 12 அளவிற்கு கூடுதலான விட்டமும், 10 இன்ச் ஆழமும் இருந்தால் சிறப்பு.
தோட்டம் மண் தொட்டியின் அடியில் 2 இன்ச் உயரம் அளவிற்கு பரப்பிவிட்டு, முளைவிட்ட உருளைக்கிழங்கை வைத்து அதற்கு மேல் தொழுவுரம் மற்றும் தேங்காய் நார் கலவையை உருளைக்கிழங்கின் முழு அளவிற்கு மேலாக ஒரு சென்டிமீட்டர் இருக்கும் படி பரப்ப வேண்டும்.
செடி வளர வளர, தோட்டம் மண், தேங்காய் நார், தொழு உரம் கலவையை இட்டு வரவேண்டும். சுமார் 90 நாட்களில், செடி மஞ்சள் நிறமாக வாடி சரிந்து விடும். தொட்டியை கவிழ்த்து உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம்.
உரம்:
மிகச்சிறந்த தொழுவுரம். நுண் ஊட்டச்சத்துக்கள், மண்ணின் அடியில் விளையும் விளை பொருட்களுக்காக தனியாக கலவை செய்து விற்கப்படுகின்றன. அவற்றை தக்க அளவில் பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்.
தண்ணீர் அளவாக ஊற்ற வேண்டும். அளவிற்கு மிஞ்சினால், கிழங்கு கெட்டுவிடும்.
வீட்டில் காய்கறி செடி வளர்க்கும் பொழுது தோட்டக் கலையில் பயிற்சி பெற்றவர்களிடம் அறிவுரை கேட்டு செயல்படுங்கள். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை மாடியிலேயே விளைவித்து கொள்ளலாம்











