என் குருதியில் கலந்துவிட்ட பிளாஸ்டிக்!

என் குருதியில் கலந்துவிட்ட பிளாஸ்டிக்!
இந்த கட்டுரை மூலம், குருதியில் கலக்கும் அளவிற்கு வாழ்வில் கலந்துவிட்ட பிளாஸ்டிக் குறித்த என் கருத்தை பகிர்கிறேன், யாருடைய கருத்துக்கு எதிர் கருத்துக் கூறி மோதலை வளர்க்கவோ அல்லது யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.


கடந்த நாள் மாலை நேரத்தில், சமூக ஊடகமான வாட்ஸ்-அப் மூலம் ஒரு காணொளி வந்தது.  அதில் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று குறித்து விளக்குகிறார்.  அவரின் கூற்றின்படி, 27 நபர்களிடமிருந்து பெறப்பட்ட குருதி மாதிரிகளில், 24 நபர்களின் குருதியில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கண்டறியப்பட்டன.

இந்த அதிர்ச்சி செய்தி, நான் இரவு உணவை எடுத்துக்கொள்ளும் பொழுது இருந்தே என் மனதை நெருடி வந்தது.  உறங்கப் போகும் நேரத்திற்கு முன் ஓர் திடமான முடிவெடுத்தேன்.  அதாவது மறுநாள் முதல் உணவு தொடர்பானவற்றில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தப் போவதில்லை என. அதே சிந்தனையுடன் இரவில் தூங்கி போனேன்.

காலை 5 மணி அளவில், "அம்மா... பால்..." என்ற குரல் கேட்க, பால் பொதியப் பட்டிருப்பது பிளாஸ்டிக்கில்!

அரிசி மூட்டையில் துவங்கி, உப்பு பாக்கெட் வரை அனைத்து உணவுப் பொருட்களும் பொதியப் பட்டிருப்பது பிளாஸ்டிக்!!!, என்ற உண்மையை அறிந்து கொண்டேன்.

Mixie Jar, Wet Grinder, RO, Fringe-ன் காய்கறி Tray முதல் ஐஸ் கட்டி Tray என அனைத்திலும் பிளாஸ்டிக்.  காய்கறி நறுக்க பயன்படும் Tray முதல் பருப்பு வகைகளை சேமிக்க பயன்படுத்தும் டப்பாக்கள் வரை அனைத்தும் பிளாஸ்டிக்.  அவை கண்ணாடி குடுவையாக இருந்தாலும் அதன் மூடிகள் என்னமோ பிளாஸ்டிக். பல் துலக்க பயன்படும் Brush பிளாஸ்டிக்.  மருந்து குப்பிகள், மாத்திரை Strips, மருத்துவத்திற்கு பயன்படும் பாகங்கள் என அனைத்தும் பிளாஸ்டிக்.  மருத்துவத்தில் குருதிக்கொடை பெறுவதும் பிளாஸ்டிக்கில்!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, அணிந்து கொள்ள பயன்படுத்தும் அனைத்தும் பிளாஸ்டிக் அல்லது அவை சார்ந்தவை அல்லது அவை கலந்தவை! நான் படுத்து தூங்குவதும், போர்தி கொள்வதும் பிளாஸ்டிக் தொடர்புடைய ஒன்றையே.

மாலை நேரத்தில் ஒன்றை உணர்ந்து கொண்டேன், இன்றைய சூழலில், இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் எனில், வாய்ப்பே இல்லை. மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்புடையில்லாத "இயற்கை விவசாயம்",  "நாட்டு மாட்டின் பால்" போன்ற கொள்கைகளை போல... ஒரு சிலரின் பொழுதுபோக்கிற்காக "பிளாஸ்டிக் ஒழிப்பு" என்கிற கூக்குரலும் இருந்துவிட்டுப் போகட்டும்.   

பிளாஸ்டிக் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை!  என் குருதியில் மட்டுமல்ல... என் மனதிலும் பிளாஸ்டிக் ஒன்றென கலந்துவிட்டது...!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: