மின் வண்டிகளுக்கான விலை குறைந்த மின்கலன்: சென்னை ஐஐடி ஆய்வுக் குழு தீவிர முயற்சி

மின் வண்டிகளுக்கான விலை குறைந்த மின்கலன்: சென்னை ஐஐடி ஆய்வுக் குழு தீவிர முயற்சி

மின்சார வண்டிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயான் மின்கலன்களுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் மின் ஏற்றம் (Recharge) செய்யக் கூடிய ஜிங்க்-ஏர் மின்கலனை வடிவமைக்கும் பணியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய மின்கலன் தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் மின்கலன்களை வடிவமைக்க பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இப்போது உள்ள லித்தியம்-அயான் மின்கலன்களுடன் ஒப்பிடுகையில், இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட வாழ்நாள் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் மின்கலன்களை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வண்டிகளில் பயன்படுத்த முடியும்.

சீனா:

இந்திய அரசின் வாய்ப்பான கொள்கைகள் மற்றும் மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றால் இந்திய மின்சாரத் துறை அண்மைக் நாட்களாக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. மின்சார வண்டிகளில் பெரும்பாலும் லித்தியம்-அயான் மின்கலன்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. 

லித்தியம்-அயான் மின்கலன்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் சீனா, மின்சார வண்டிக்கான மின்கலன் உற்பத்தித் துறையில் ஆட்சி செலுத்துகிறது. இப்போது, இந்திய மின்சார வண்டி உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து தான் லித்தியம்-அயான் மின்கலன்களை இறக்குமதி செய்கின்றன.

ஜிங்க்-ஏர் பேட்டரி:

லித்தியம்-அயான் மின்கலன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு வரம்புகள் உள்ளன. தவிர, இந்திய சந்தையின் வெவ்வேறு தேவைகள் எல்லாவற்றிற்கும் லித்தியம்-அயான் மின்கலன்ளை பயன்படுத்திவிட முடியாது. லித்தியம்-அயான் மின்கலன்களுக்கு மாற்றான ஒன்றை, குறைந்த செலவில் வடிவமைக்கும் முயற்சியில் ஐ.ஐ.டி.மெட்ராஸ்-ன்  வேதி பொறியியல் துறை உதவிப் பேராசிரியரான  முனைவர் அரவிந் குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். துத்தநாகம் பரவலாகக் கிடைக்கக் கூடியது என்பதால், ஜிங்க்-ஏர் மின்கலன்களில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களுக்கு முன்மாதிரி: தங்கள் ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் வேதிப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். அரவிந்த் குமார் சந்திரன் கூறுகையில்,

"மின்சார வண்டிகளுக்கான ஜிங்க்-ஏர் மின்கலன்களுக்கு எதிர்வரும் நாட்களுக்கான மாதிரியை வடிவமைக்கும் பணியில் எங்கள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டுள்ளது. இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்வதற்கான வழிகளையும் நாங்கள் கண்டறிந்து வருகிறோம். ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் இப்போது ஜிங்க்-ஏர் செல்களை வடிவமைத்து, மின்சார வண்டிகளுக்கான ஜிங்க்-ஏர் தொகுப்பாக வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜிங்க்-ஏர் மின்கலன்களில் மிகப் பெரிய நன்மை உண்டு. ஏனெனில், லித்தியம்-அயான் மின்கலன்களைப் பயன்படுத்தும்போது, அவற்றின் வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒட்டுமொத்த மின்கலன் தொகுப்பையும் அகற்றிவிட்டு, முழுமையான லித்தியம்-அயான் மின்கலனை மாற்ற வேண்டும். இதனால் லித்தியம்-அயான் மின்கலன்களுக்கான மூலதன முதலீடு கூடுகிறது.  அதே வேளையில், ஜிங்க் - ஏர் மின்கலகளை பொருத்தவரை, பாதிப்படைந்த தொகுப்புகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.  அதனால், செலவினங்கள் குறையும்."

என்றார்.


மின் ஏற்றி நிலையங்கள்:

பெட்ரோல் நிலையங்களைப் போன்று, "ஜிங்க் மின்கலனுக்கான மின் ஏற்றி நிலையங்களை" தனியாக அமைக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

ஜிங்க்-ஏர் மின்கலன்களைப் பயன்படுத்துவோர் மின்கலனில் மின்சாரம் தீர்ந்துவிடும்போது, பெட்ரோல் நடுவங்களில் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்பிச் செல்வதைப் போன்று இந்த நிலையங்களுக்கு வந்து மின் ஏற்றம் செய்து கொள்ளலாம். "மின்கலன் மாற்றம்" என்ற அடிப்படையிலான தொழில்நுட்பத்தில், வண்டி ஓட்டிகள் தங்களிடம் உள்ள "ஜிங்க் கேசட்"களுக்கு பதிலாக முழுவதும் மின் ஏற்றம் செய்யப்பட்ட "ஜிங்க் கேசட்"களை "ஜிங்க் மின் ஏற்ற நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம். பயன்படுத்தப்பட்ட "ஜிங்க் கேசட்"களை ஞாயிறு  தகடுகள் (Solar Panel) மூலம் மின் ஏற்றம் செய்யவும் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: