ஓசூருக்கு வந்துவிட்டது கோளரங்கம் - Planetarium!. அதனுடன் சேர்ந்து அறிவியல் பூங்கா!. அறிவியல் கருவிகள் செய்முறை விளக்கங்கள் என, இளம் வயதினர் கற்றலுக்குத் தேவையான ஏராளமான கருவிகள் ஒரே இடத்தில். பல நகரங்கள் இத்தகைய வசதி கிடைக்க வேண்டும் என ஏங்கி நிற்கும் நிலையில், ஓசூருக்கு இந்த சிறப்பு வாய்ந்த கற்றல் பூங்கா கிடைத்துவிட்டது. ஒரு சின்ன சுற்றுப்பார்வை.
கடந்த மார்ச் 29 ஆம் நாள் மாநகராட்சி மேயர் S A சத்யா, துணை மேயர் ஆனந்தையா ஆகியோர் முன்னிலை வகிக்க, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ், மரம் நட்டு, அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
மூன்றேகால் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராமநாயகன் ஏரி கரையோரம், தளி சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் பூங்கா மற்றும் கோளரங்கம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
இப்பூங்கா சுமார் ஒன்றேகால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வளாகத்தின் நுழைவாயில் அருகே கோளரங்கம் அமைந்துள்ளது. உள்ளே சுமார் 45 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து காட்சிகளை காண இயலும்.
அறிவியல் என்பது பாடநூலில் மட்டும் அடங்கி விடாது. குழந்தைகள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள், அறிவியலை நேரில் பார்த்து அனுபவித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் ஓசூரில் கட்டப்பட்டுள்ள கோளரங்கம் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு அறிவாற்றல் பெருக்குவதில் பெரும் பங்காற்றும்.
இந்த கோளரங்கத்தின் வாயிலாக, விண்வெளி மற்றும் வானியல் தொடர்பான அரிய அறிவியலை எளிய முறையில் மாணாக்கர்களுக்கு எடுத்துரைக்க இயலும். சூரிய குடும்பம், கோள்களின் இயக்கம், விண்மீன்கள், வானிலை மாற்றங்கள், கிரகணங்கள் போன்ற பல அறிவியல் தொடர்பான நிகழ்வுகள் உயிர்பூட்டப்பட்ட காட்சியாக காண்பிக்க உதவும்.
கோளரங்கம் அருகிலேயே ஏராளமான அறிவியல் விளக்கக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதன் பயனாக மாணாக்கர்கள், இயற்பியலின் அடிப்படையான, விசை, இயக்கம், சமநிலை, ஆகியவற்றை எளிதில் புரிந்து கொள்வார்கள். ஒலி மற்றும் ஒளி கடத்தல் முறைகளை விளக்கும் கருவிகளும் அமைந்துள்ளது. சுழற்சி, தூக்குமுறை, நிலைநிறுத்திக் கொள்ளும் தன்மை ஆகியவை குறித்த விளக்கக் கருவிகளும் உள்ளன.
கோளரங்கம் மற்றும் அறிவியல் பூங்கா ஓசூருக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். விளையாட்டின் மூலம் அறிவியலை புரிந்து கொள்ளுதல், கற்றல் ஆர்வத்தை மேலும் தூண்டுதல் ஆகியவை இப்பூங்காவின் அடிப்படையாக அமைந்துள்ளது.








