HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  Athukattu Festival Near Hosur: A Rare Manjuvirattu Tradition Rooted in Farming Culture
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - Athukattu Festival Near Hosur: A Rare Manjuvirattu Tradition Rooted in Farming Culture

ஓசூர் அடுத்த கோபச்சந்தரத்தில், "அத்துக்கட்டு" என்னும் " மஞ்சுவிரட்டு" விளையாட்டு!. நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்ட இந்த விளையாட்டில், காளைகளுடன் விளையாட, ஆயிரக்கணக்கான காளையர்கள் குவிந்திருந்தனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள், இந்த வண்ணமிகு உழவு திருவிழாவின் நிகழ்ச்சியை காண, விழா திடலில் திரண்டனர். 

ஒவ்வொரு ஆண்டும், ஓசூரை எடுத்த தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கோபச்சந்திரம் ஊரின் பெருமாள் கோவிலின் அடிவாரத்தில், அரிசி விளைவித்த நிலம் சமன்படுத்தப்பட்டு, இந்த உழவு திருவிழா, மனிதர்களுக்காய் உழைக்கும் விலங்குகளை சிறப்பிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. 

தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், சாணமாவு காட்டின் அருகே, ஓசூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், பசுமையான சூழலில் அமைந்துள்ள ஊர் கோபச்சந்திரம்.  இந்த ஊரில் அமைந்துள்ள குன்றின் மீது, பெருமாளுக்கு ஆலயம் கட்டியுள்ளனர். ஒவ்வொரு நாளும் கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பெருமாளை வணங்கி வேண்டுதல்களை பெற இந்த ஆலயத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்று வந்த இந்த "அத்துக்கட்டு" விளையாட்டை கடந்த மூன்று ஆண்டுகளாக, தை திருநாளாம் பொங்கல் திருவிழாவை ஒட்டி, கோவிலை தலைமையேற்று வழி நடத்தும் குழுவினர் சிறப்புடன் நடத்தி வருகின்றனர். 

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார நூற்றுக்கணக்கான ஊர் புறங்களில் இருந்து, ஏராளமான நாட்டு இன காளைகள், டாட்டா ஏஸ் போன்ற சரக்கு வண்டிகள் மூலம், விளையாட்டு திடலுக்கு பாதுகாப்பாக களைப்பின்றி அழைத்து வரப்படுகின்றன.  அவற்றுடன், விழா கொண்டாட்டத்தை மனதில் ஏற்றியவாறு, இளைஞர்கள் பலர், இந்த விளையாட்டு தங்கள் உழைப்பின் மற்றும் தொழிலின் அடையாளம் என்பதை, மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் வண்ணமிகு ஆடைகள் உடுத்தி, காளைகளைக் கட்டித் தழுவியபடி வந்தது, பார்வையாளர்களுக்கு இந்த விழாவின் அடிப்படையை எடுத்துரைக்கும் விதமாக அமைந்திருந்தது. 

பொதுவாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எனும், மாடுபிடி விளையாட்டு பொங்கலை ஒட்டி நடைபெறும். "அத்துக்கட்டு" என்பது முற்றிலும் இதற்கு மாறுபட்டது. "அத்து" என்ற சொல், "எல்லை" என பொருள்படுகிறது. எடுத்துக்காட்டாக "அத்து மீறல்". இங்கே, காளைகளின் கொம்புகளில் வண்ணமிகு பதாகைகளை கட்டி,  ஒரு எல்லையில் அவிழ்த்து விடுகிறார்கள்.  அவிழ்த்து விடப்பட்ட காளைகள், குறிப்பிட்ட அடுத்த எல்லையை கடப்பதற்குள், அதன் கொம்புகளில் கட்டியுள்ள பதாகையை அவிழ்த்தெடுக்கும் இளைஞர் போட்டியில் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறார்.  இதற்கு பரிசாக பல ஆயிரம் ரூபாய் முதல், பல பரிசு பொருட்கள், என ஒவ்வொரு காளைக்கும், தனித்தனியாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. 

காளைகளுக்கும், காளையருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் என எதுவும் விதிக்கப்படுவது இல்லை. சிறிய இளம் வயது கன்று குட்டிகள் முதல் இத்தகைய விளையாட்டுக்கு என்று ஆயத்தப்படுத்திய காளைகள் வரை, தொகுப்புகளாக விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில், முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் கால்நடைத்துறை சார்பில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது.  மருத்துவ உதவிக்கு ஏராளமான ஆம்புலன்கள் ஆயத்த நிலையில், மருத்துவக் குழுவினருடன் இருந்தன.  போதுமான அளவு வண்டிகளை நிறுத்துவதற்கு சமதளமான திடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

தென்பெண்ணை ஆற்றில், விழாவினை பார்வையிட வந்த மக்கள் யாரும் விழுந்து பாதிப்புக்கு உள்ளாகாத படி, ஆற்றின் கரையோரமும், ஆற்றைக் கடக்கும் பாலத்தின் மீதும், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சிறப்பான ஏற்பாடுகளை செய்து தந்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, தீயணைப்புத்துறை, கால்நடை துறை மற்றும் மருத்துவத் துறையினருக்கும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.  ஒருங்கிணைந்த செயல்பட்ட விழா கமிட்டியினருக்கும் பாராட்டுக்கள். 

உழவுக்கும், உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் இந்த ‘அத்துக்கட்டு’ விளையாட்டு, தமிழர் பண்பாட்டின் உயிரோட்டமாக விளங்குகிறது.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்