HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  From “Amma” to “Mommy” — that one line tells a big story.
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - From “Amma” to “Mommy” — that one line tells a big story.

இனி ஓசூர்ல மாடு "அம்மான்னு" கத்தாது… "மொம்மின்னு" தான் கத்தும்!. ஏன்? எதனால்? 

ஓசூர்ல மாடு கத்துனா… “அம்மா… அம்மா…” என்றுதான் ஒலிக்கும்.

இதுவெல்லாம் இனி கொஞ்சம் நாளைக்குத்தான்.  இனி, அதே மாடுகள், “மொம்மி… மொம்மின்னு” கத்தும்னா நம்புவீங்களா?.

இது நகைச்சுவை மாதிரி தெரிஞ்சாலும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடனான புதிய வணிக ஒப்பந்தம், நம்ம ஓசூர் உழவர்களின் வாழ்க்கையையே தலைகீழா மாத்தப் போகுதா?.  இந்த ஒப்பந்தங்கள் மட்டும்தானா?.  

விமான நிலையம், உலகளாவிய அறிவு சார் வழித்தடம் போன்றவை எல்லாம் சேர்ந்து ஓசூர் உழவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றுமோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. வாங்க தெளிவா பேசலாம்.

இவற்றையெல்லாம் முதலில் புரிந்து கொள்ள, கேரளாவுக்கு போகணும். அங்கு நடந்த ரப்பர் கதையை கேட்கணும். 

தங்கம் போல இருந்த ரப்பர்,  உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களின் தாக்கம், இறக்குமதி போட்டி, கார்ப்பரேட் லாபி அழுத்தங்கள் – இவற்றால் சிறு விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியது.

பல எதிர்ப்புகள் எழுந்தும், பெரும் தொழில் நலன்கள் முன்னிலை பெற்றன என்பதே அங்குள்ள அனுபவம்.

அந்த கதைதான் இன்று ஓசூருக்கு ஒரு எச்சரிக்கை.

ஓசூரின் விளை நிலங்கள், தென்பெண்ணை ஆறு ஏற்படுத்திய பசுமை, கொஞ்சம் கொஞ்சமா அழிய போகுதா? அழிக்கப்பட போகுதா?.

தமிழ்நாட்டில் ஓடும் காவிரிக்கு அடுத்தபடியாக, மிக நீளமான ஆறு "தென்பெண்ணை ஆறு". கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஐந்து தடுப்பணைகள்.  கெலவரப்பள்ளி அணையில் இருந்து இரண்டு கால்வாய்கள்!. இவை ஊட்டிய பசுமை ஈர நிலங்கள் தான் ஓசூரின் உயிர்நாடி.  அவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், நெல், ராகி - நாட்டின் பிற பகுதிகளுக்கு உணவளித்து வருகிறது. 

ஆனா இப்போ பேசப்படுற திட்டங்கள், Global Knowledge Corridor, புதிய விமான நிலையம், அதனைச் சுற்றிய பல்வேறு தொழில்நுட்ப பெயர்களைக் கொண்ட தொழிற்பூங்காக்கள்.  

இவற்றுக்காக சுமார் 10,000 ஏக்கர் வளமான விளைநிலங்கள் மாற்றுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படலாம்னு தகவல்கள் வருது.  சட்டப்படி “ஓசூர் வளர்ச்சி திட்டம்னு” சொன்னாலும், வாழ்வாதாரம் இழக்கப் போவது உழவர்கள்தானோ?.

2013 நிலம் கையகப்படுத்தல் சட்டம் சொல்கிறது “நிலம் இழப்பவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்துவது அரசின் கடமை”. ஆனால் நடைமுறை?

ஓசூரில் உழவர்களிடம் பேசிய நன்கறிந்த அரசியல் தலைவர், "எத்தனை நாட்களுக்குத்தான் ட்ரவுசரை போட்டுக்கொண்டு மாடுகளை இழுத்துச் செல்வீர்கள்.  நிலங்களை விட்டுக் கொடுத்து, வளர்ச்சியில் அங்கமாகிக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை. 

அப்படி என்றால், தொழிற்சாலை வந்தால் வேலை, அதனால் ஏற்படும் வாழ்க்கை உயர்வு.

ஆனால் உண்மை நிலை என்ன?. ஓசூர் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் நிரந்தரமற்ற ஒப்பந்த வேலை. தொழிற்சங்க உரிமைகள் இப்போது கேலி கூத்து.

நிலம் போயிடுச்சு, நிலையான வருமானமும் இல்லை!. ஏற்கனவே நிலங்களை இழந்தவர்கள் சொல்லும் கதை நமக்கு “திக் திக்”.

ஓசூரில் வளர்ச்சி... வளர்ச்சி... என்கிறோம்.  இதுவெல்லாம், ட்ரோன் காணொளி காட்சிகளுக்கும், மெருகூட்டப்பட்ட காணொளிகளுக்கும் அருமை தான்.  இவற்றால் பயன்பெறுவது ரியல் எஸ்டேட் தொழில் மட்டுமே.  

பெரும்பாலான தொழிற்சாலைகள், "வேர்வை தொழிற்சாலைகள் - ஸ்வர்ட் ஃபேக்டரி"  மற்றும் "புதிய வகையான கொத்தடிமை முறைக்கு வழிவகுப்பவை" என்றும் தன்னார்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளது.  இதனால் ஓசூர் உழவர்களுக்கு என்ன பாதிப்பு?.  இந்தியாவிலிருந்து  ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 18 விழுக்காடு வரி அமெரிக்கா விதிக்க வழிவகை உள்ளதாக தகவல். ஆனால் அமெரிக்காவிலிருந்து பால், பருப்பு மற்றும் பிற உணவு பொருட்கள் மலிவா வரும்.  வரி எதுவும் அதற்கு கிடையாது என்ற கருத்து நிலவுகிறது.. 

நமது உழவர்களின் நிலங்களை பறித்துக்கொள்ள துடிக்கின்றன அரசுகள்.  அமெரிக்காவை பொறுத்தவரை உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையால் ஏற்படும் பாதிப்பு?. கேரளா ரப்பரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  உள்ளூர் பால் விலை விழும்.  தீவனப் பயிர் தேவைகள் குறையும்.  மாடு வளர்ப்பு மற்றும் விளை பொருள் உற்பத்தி வருவாய் ஈட்டாது. 

இப்போது புரிகிறதா? “அம்மானு கத்துற மாடும், மொம்மின்னு ஏன் கத்தும்னு?!”

ஓசூர் வெறும் தொழில் நகரம் மட்டுமில்லை.  உழவும், கால்நடையும் கலந்த வாழ்வியல்.  

அந்த அடையாளம் அழியாம, வளர்ச்சியும் – வாழ்வாதாரமும் சேர்ந்து இயங்கனும்.

ஒரு பழமொழி நினைவிற்கு வருகிறது... அடுத்தவருக்கு வரும் தலைவலி நமக்கு கதை.  அதே தலைவலி நமக்கு வந்தால்?.  சிந்தித்துப் பாருங்கள் ஓசூர் மக்களே.


Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்