ஓசூர் அருகே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தில் காளைகள் புகுந்ததால் ஏராளமானோர் படுகாயம்.
ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஊர் குந்துக்கோட்டை. பாறை குன்றின் மீது மல்லிகார்ஜுனா சுவாமி, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வரலாறு கொண்ட இக்கோவிலில் அமைந்துள்ள தூண்கள், நம் முன்னோர்களின் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஆண்டுதோறும், மாசி திங்களில் தேர் திருவிழாவும், அதைத்தொடர்ந்து மறுநாள், மாடு பிடி விளையாட்டு என்கிற மஞ்சுவிரட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும், நூற்றுக்கணக்கான களவீரர்களும் பங்கெடுத்த மஞ்சுவிரட்டு விளையாட்டில், பல்வேறு ஊர்களில் இருந்து, காளைகள் கொண்டுவரப்பட்டு, திரளான மக்கள் கூட்டத்தின் நடுவே அவிழ்த்து விடப்பட்டன.
தேன்கனிக்கோட்டை முதல், விளையாட்டு நடைபெற்ற திடல் வரை என எல்லா இடங்களிலும், முழுமையான பாதுகாப்பு காவல்துறையினரால் வழங்கப்பட்டிருந்தது. ஏராளமான மருத்துவ ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஏற்பாட்டுடன் முழுவீச்சில் மருத்துவ பணி ஆற்றினர். வருவாய்த்துறை மற்றும் கால்நடை துறையினர் முழுமையான கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அரசு சார்பில் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும், பார்வையாளர்களையும், களவீரர்களையும், அவிழ்த்து விடப்படும் காளைகளையும், முறைப்படுத்தும் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தாததால், பலர் படுகாயம் அடைவதாக பார்க்க வந்த பொதுமக்கள் பலர் ஒருமித்த கருத்து கூறினர்.
வரும் ஆண்டுகளில், இந்த மாடுபிடி விளையாட்டை அரசே முறைப்படுத்தி, பார்வையாளர் மாடங்கள் அமைத்து, பொதுமக்களுக்கும், களவீரர்களுக்கும், அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








