Hosur News, ஓசூர் செய்திகள் - Residents Raise Concerns Over Drinking Water Supply Near Hosur

ஓசூர் அருகே… குடிநீர் தட்டுப்பாடு. கோடை வரட்சியால் ஏற்படவில்லை.  முழுக்க முழுக்க மனிதர்களின் தன்னலத்தால்.

அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து குடிநீர் வழங்க கட்டமைப்புகள் அமைத்திருந்தும், பழங்குடியினரும் மலைவாழ் மக்களும் தரமற்ற தண்ணீரை குடிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?. 

இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?.

முதலில் இந்த தண்ணீரை பாருங்கள். இதைத்தான் இப்பகுதி மலைவாழ் மக்கள் குடிநீராக பயன்படுத்துகிறார்கள்.  இந்த தண்ணீரை அப்படியே குடிப்பதாக கூறுகிறார்கள்!. 

ஓசூர் அடுத்த பெட்டமுகிலாலம், தளி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊராட்சி,

அய்யூர் காட்டின் நடுவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உயரமான மலை பகுதிகளில் அமைந்துள்ளது.  நூற்றுக்கணக்கான சிற்றூர்களில் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

பெட்டமுகிலாலம் அருகிலுள்ள பால்ராஜ் நகர் என்கிற கோட்டையூர் கொல்லை, சித்திக் நகர் மற்றும் ஜெயபுரம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கொடுமையான குடிநீர் தட்டுப்பாடு. இந்த காணொளி மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

முதலில் ஜெயபுரம் புதூர்.  இங்கு பழங்குடி இன மக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். 

ஊராட்சி சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன் கிணறு வெட்டி, அதிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  அந்த கிணறு வறண்ட நிலையில், குடிநீர் வழங்க, ஊரின் மற்றொரு எல்லையில், மக்களின் கோரிக்கைக்கு இணங்க இடம் தேர்வு செய்யப்பட்டு கிணறு வெட்டி, மும்முனை மின்சார இணைப்பு பெற்று நீர் உந்தியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

கிணற்றின் அருகே வாழும் தனிநபர் குடும்பம் ஒன்று, மக்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாயை துண்டித்து, இந்த கிணற்றுத் தண்ணீரை தங்களின் விளை நிலங்களுக்கு பாய்ச்சிக் கொள்வதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  அந்த தனிநபர், தமது விளை நிலங்களில் இரண்டு கிணறுகள் வெட்டி இருந்தாலும், அவை நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் வழங்க இயலாத நிலையில் உள்ளதால், இத்தகைய குறுக்கு வழிகளை பின்பற்றுவதாக ஓசூர் ஆன்லைனிடம் பேசிய பகுதி மக்கள் கூறுகின்றனர். 

மேலும், கிணற்றிலிருந்து ராட்டினம் வைத்து தண்ணீர் இறைத்தால், அவற்றை பிடுங்கிக் கொண்டு சென்று விடுவதாக பழங்குடி இன மக்கள் தெரிவிக்கின்றனர்.  

இந்த குடும்பத்தினர், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாம். 

இதனால், அடர்ந்த காப்புக் காடுகளுக்குள் சென்று குட்டைகளில் தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாம். மேலும், பழைய கிணற்றிலிருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை குறைந்த அளவு தண்ணீர் வழங்கப்படுவதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து ஓசூர் ஆன்லைன் சார்பில், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமாரிடம் வினவிய போது, தமது உறவினர் ஊர் மக்களுக்கான தண்ணீரை எடுத்ததை ஒப்புக்கொண்டார்.  மேலும் கூறிய அவர், இந்த சிக்கல்களுக்கு தீர்வாக மின்சார இணைப்பு பியூஸ் கட்டைகளை தாம் பிடுங்கி வீட்டில் வைத்திருப்பதாக கூறுகிறார். 

தண்ணீர் தட்டுப்பாடு குறித்து நாம் எடுத்துரைத்த போது, பிப்ரவரி முதல் மே வரை இந்நிலை தொடரும் என வேதனை தெரிவித்தார்.

அடுத்ததாக பால்ராஜ் நகர் என்கிற கோட்டையூர் கொல்லை மற்றும் சித்திக் நகர் குடிநீர் தட்டுப்பாடு.  

இந்த இரண்டு ஊர்களுக்கும் சேர்த்து மூன்றுக்கும் மேற்பட்ட மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன.  எல்லா வீடுகளுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு குழாய்கள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், முறையாக தண்ணீர் வழங்குவது இல்லை என்கிற குற்றச்சாட்டு பகுதி மக்களால் முன்வைக்கப்படுகிறது. 

கோட்டையூர் கொல்லை ஊர், 2000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மாவட்ட வன அலுவலராக இருந்த பால்ராஜ் அவர்கள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியதனால், இன்று “பால்ராஜ் நகர்” என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

அதேபோல், முன்னாள் மாவட்ட ஆட்சியர் எம் ஏ சித்திக் அவர்கள் உருவாக்கிய பழங்குடியின குடியிருப்பு பகுதி, “சித்திக் நகர்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கொடுமையாக, கோட்டையூர் கொல்லை ஊரில் வாழும் பழங்குடியின மக்கள், தனி நபர்கள் வெட்டிய கிணற்றிலிருந்து கலங்கிய தண்ணீரை இறைத்து குடிநீராக பயன்படுத்தும் அவல நிலையை காணொளியில் காணலாம்.

அரசு வழங்கும் தீர்வுதான் என்ன? இந்த கேள்விக்கான பதில், ஏற்கனவே இந்த பகுதியில் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பே, பெட்டமுகிலாலம் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை உயர்த்தவும், மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அந்த தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்படவில்லை. ஊராட்சி செயலாளரின் கூற்றுப்படி, அருகிலுள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய சூழ்நிலையால், தடுப்பணை நீர் பொதுமக்களின் தேவைகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் இப்பகுதிகளில் ஏட்டளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  அரசு சார்பில் இத்திட்டத்திற்கான மேம்பாட்டு பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றது, என்கின்றனர் பகுதி மக்கள். அந்த தண்ணீரும் விளைநிலங்களுக்கு ஊராட்சி செயலாளரின் அருளால் வழங்கப்படுகிறதோ?, என பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் தட்டுப்பாட்டை மாவட்ட ஆட்சியர் களைய நடவடிக்கை எடுப்பாரா? பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: