அரிதிலும் அரிதான நிகழ்வாக, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த யானை, இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.
வழக்கமாக யானை இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுப்பது என்பது அரிதிலும் அரிதானது. இரட்டைக் குட்டிகளுடன் தாய் யானை சுற்றிவரும் காணொளி சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு, விரும்பப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு, 1980 களில் இதுபோன்ற இரட்டை யானைக் குட்டிகள் பிறந்தது இங்கு பதிவாகியிருப்பதாக அலுவலர்கள் குறிப்பிட்டனர்.
வழக்கமாக யானைகள் குட்டிகளை ஈன்றெடுப்பதில் ஒரு விழுக்காடு மட்டுமே இரட்டைக் குட்டிகள் பிறக்க வாய்ப்பிருக்கும். அதிலும், இரட்டைக் குட்டிகள் பிறக்கும்போது இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இறக்கும் வாய்ப்பும் கூடுதலாக இருக்கும் என்கிறார்கள். இரண்டு குட்டிகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காது என்பதால், பிறந்த ஒரு சில திங்களில் ஒரு குட்டி இறக்கும் வாய்ப்பும் இருக்குமாம்.
உலகில் எப்போதாவது இதுபோன்ற அரிய நிகழ்வு பதிவாகும். பொதுவாக யானைக் குட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் குடிக்குமாம். இதனால், இரட்டை யானைக் குட்டிகளைப் பெற்றெடுக்கும் யானைகள் அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பல சவால்களை சமாளிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.











