மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி ரயில் வழித்தடப் பணி விரைந்து முடிக்கப்படுமா?

மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி ரயில் வழித்தடப் பணி விரைந்து முடிக்கப்படுமா?

மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி தொஇடர்வண்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்கப்படுமா? என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.

 இது தொடர்பாக மக்களவையில் அறிவன் கிழமை (03.07.2019) கேள்வி நேரத்தில் அவர் துணைக் கேள்வி எழுப்பினார்.

அதில், மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி தொடர்வண்டி வழித்தடப் பணிகளை முடிப்பதற்காக தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதா?

இந்த தொடர்வண்டி வழித்தடப் பணிகள் 2021-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்கான ஒட்டுமொத்த செலவு ஒதுக்கீடு ரூ.1,882 கோடியாகும்.

ஆனால், இதுவரை ரூ.342 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவு திட்ட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டு, உரிய நேரத்திற்குள் திட்டப் பணி முடிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு தொடர்வண்டி பாதை துறை இணையமைச்சர் சுரேஷ் சன்னபஸப்பா அங்கடி பதில் அளித்துப் பேசுகையில், தமிழகத்தில் 22 புதிய ரயில் வழித்தடம், அகல தொடர்வண்டி பாதைத் திட்டங்கள் ரூ.22 கோடி மதிப்பீட்டில் உள்ளன.

பல்வேறு முன்னேற்ற நிலையில் உள்ள இத்திட்டங்களில் 2009 ௨010, 2010 - 2013 ஆகிய ஆண்டுகளில் ரூ.879 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2014 - 2019 -இல் ரூ.1, 979 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செலவழித்ததைவிட 225 விழுக்காடு கூடுதலாகும் என்றார்.

அப்போது கனிமொழி எம்.பி. நான் தூத்துக்குடி தொடர்வண்டி வழித்தடப் பணிகளைக் கேட்டேன் என்றார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் அங்கடி, ஒரு திட்ட அமைப்பு உள்ளது. திட்டப் பணிகளை முடிக்க நிலம் அளிப்பது தொடர்பாக மாநில அரசும், நடுவன் அரசும் ஒருங்கிணைக்க வேண்டும். நிலம் தொடர்பானவரி முடிவடைந்தால் உடனடியாகத் திட்டப் பணிகளை தொடர்வண்டி துறை தொடங்கும் என்றார்.

அப்போது, கனிமொழி, ஐந்து தொடர்வண்டி துறை அச்சகங்களை மூடுவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான தேவை என்ன என்று துணைக் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் அங்கடி கூறுகையில் இந்த வகை அச்சகங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.

தற்போது மக்கள் படிப்படியாக இணையதளத்தில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

அச்சகங்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த பயணச்சீட்டுகள் சிலவற்றின் அச்சடிப்பு விலை பயண கட்டணத்தின் மொத்த விலையை விட கூடுதலாக உள்ளது.

நாங்கள் ரயில்வே துறையில் திறனைக் கொண்டுவர விரும்புகிறோம். இந்த அச்சகங்களில் பணியாற்றிவரும் அனைவரின் நலன்கள் பாதுகாக்கப்படும்.

அவர்கள் ரயில்வே துறையின் இதரப் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இவர்களில் யாருக்கும் பணியிழப்பு ஏற்படாது என்றார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: