ஓசூரில் விளையும் ஆப்பிள்!. காஷ்மீர், ஊட்டி, கொடைக்கானலுக்கு சவாலா?
ஆரஞ்சு கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகிறது. அவகோடா மரங்கள் பழங்களால் நிறைந்து காணப்படுகின்றன. டிராகன் ஃப்ரூட், அத்தி, நாவல், ப்ளூபெர்ரி, இலந்தை என இருபதுக்கும் மேற்பட்ட பழ வகைகள் ஒரே தோட்டத்தில் செழித்து வளர்கின்றன.
இது ஓசூரை அடுத்த மதகொண்டபள்ளி அருகே உள்ள ஒரு உழவரின் தோட்டம்.
கடந்த நாள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், தளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பகுதியில்ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழங்களை உழவர் ஒருவர் விளைவித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மேலும் அறிய, ஆட்சியர் குறிப்பிட்ட தோட்டத்திற்கு நேரில் சென்றோம்.
உழவர் லட்சுமி நாராயணன், தமது 15 ஏக்கர் விளை நிலத்தில், ஆறு ஏக்கர் நிலத்தை, ஒருங்கிணைந்த வேளாண் முறையை நடைமுறைப்படுத்தி, ஏராளமான வகை பழ மரங்களை வளர்த்து வருகிறார்.
நாம் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன், ஆரஞ்சு மரங்கள் பழங்களால் நிறைந்து நம்மை வரவேற்கின்றன. அவகோடா பழங்கள் ஏராளமானவை கிளைகளில் தொங்குவது பார்ப்பதற்கே அழகு. கொய்யா ஒவ்வொன்றும் மிகப்பெரியதாக செழித்து வளர்ந்து பழுத்து தொங்குகின்றன.
பாறைகளுக்கு இடையே வளர்ந்துள்ள அத்தி மரங்கள், பழங்களை பறித்து சுவைக்க அழைப்பது போல தோன்றின. நாவல் பழங்கள் அணில்கள் கடித்துப் போக, நாம் ருசிக்க கிடைத்தது.
டிராகன் ஃப்ரூட் பூக்களை அருகில் பார்ப்பது பிரமிப்பு. இவை மட்டுமல்ல, ப்ளூபெர்ரி, இலந்தை என ஏராளமான வகை மரங்கள் செழித்து வளர்ந்து பலன் கொடுத்து வருவதை நம்மால் காண முடிந்தது.
ஆப்பிள் மரங்கள் நன்கு வளர்ந்துள்ளது. ஆப்பிள் என்றாலே நம் மனதில் ஒரு சிலிர்ப்பு. அதன் பூவையும், காய்களையும், பழத்தையும் மரத்தில் பார்ப்பது மனதை பூரிப்படைய வைத்தது.
இவரின் முயற்சியை முன்மாதிரியாக எடுத்து, இப்பகுதி உழவர் பெருமக்கள், தங்கள் விளை நிலங்களில் இத்தகைய பயிர்களை விளைவிக்கலாம். இருப்பினும், "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவனின் சொல்லுக்கு இணங்க, நன்கு ஆராய்ந்து, முடிவெடுப்பது சிறந்தது.








