தகவல் திரட்டு Data Mining
தகவல் திரட்டு Data Mining
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்

தகவல் திரட்டு -பவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை!

கூகுள், அமேசான் மற்றும் ஃபேஸ்புக், எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் முதல் குறிக்கோள், உங்களை பற்றிய தனிபயன் தகவல்களை திரட்டுவது.

தகவல் திரட்டு

கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான செர்சி பிரின், 1999ஆம் ஆண்டு வாக்கில், ஒரு நுட்ப வல்லுனர் மாநாட்டில் பேசும் போது, விலையில்லாமல் தாங்கள் பல தொண்டுகளை வழங்குவது, பயனர்களின் தகவல் திரட்டுவதற்குத்தான் என்றும், இந்த திரட்டப்பட்ட தகவல்கள் தான் வரும் ஆண்டுகளின் தொழில் முதலீடாக இருக்கும் என்றும் பேசினார்.

அன்றைய சூழலில், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்கும் புலப்படவில்லை.

இன்றைக்கு, உலகளவில், பெரும் தகவல் திரட்டும் நிறுவனமாக கூகுள் உள்ளது.

நீங்கள் ஆன்டிராய்டு திறன் பேசி பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் திறன் பேசியில் இருந்து, தங்களின் தனி நபர் தகவல்கள் சுமார் 11.5 mb அளவிற்கு நாள் ஒன்றிற்கு கூகுள் நிறுவனம் திரட்டுகிறது.

தனிநபர் தகவல் என்றால் என்ன?

அப்படி அவர்கள் உங்களின் தனி தகவல்களை திரட்டி என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு முன், உங்கள் தனிநபர் தகவல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 1. வீட்டின் துல்லியமான இருப்பிடம்
 2. பணியிடத்தின் துல்லியமான இருப்பிடம்
 3. பிறந்த நாள், திங்கள், ஆண்டு
 4. பிறந்த ஊர் / வாழும் ஊர்
 5. முழு பெயர்
 6. புகைப்படம்
 7. உறவுகள் குறித்த தகவல்கள்
 8. நீங்கள் பிறருடன் என்ன உரையாடுகிறீர்கள் என்ற தகவல்
 9. எங்கெல்லாம் சென்று வருகிறீர்கள், செல்லும் இடங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்
 10. உங்களின் கல்வி தகுதி
 11. மின்னஞ்சல், சமூக ஊடகங்களில் உங்களின் உரையாடல்கள்

மேற்சொன்ன இந்த தகவல்கள் தான் உங்களின் தனி நபர் தகவல்கள்.

தனி நபர் தகவல்களை திரட்டி என்ன பயன்?

ஒரு பெரிய ஊரில், மாநிலத்தில், நாட்டில் உள்ள தனி நபர் தகவல்கள் முழுமையான கிடைத்தால், நாட்டில், எந்த பகுதியில் யாரிடம் என்ன பொருள் விற்கலாம் என்பதை கணக்கிடமுடியும்.

கணக்கிட்டபின், யாரை இலக்காக வைத்து விளம்பரம் செய்தால், அந்த பொருளை வாங்குவார் என திட்டமிடலாம். தேவையற்ற பொருட்களை தலையில் கட்டிவிடலாம்.

மறைமுக விளம்பரங்கள், செய்தி தொகுப்புகளை வழங்குதல் மற்றும் பல கமுக்கமான உளவியல் நடைமுறைகளை பின்பற்றி, அந்த சமூகத்தின் சிந்தனை, செயல், சொல் அனைத்திலும் தனது திட்டங்களை புகுத்திவிடலாம்.

அரசியல் தலையீடுகளும் செய்யலாம். ஆட்சி மாற்றங்களையும் செய்யலாம்.

புதியவகை தகவல் திரட்டிகள்

இப்பொழுது, ஃபேஸ்புக்கில் ஒரு 10 ஆண்டு அறைக்கூவல் என்ற ஒரு வகை விளையாட்டு போன்ற ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.

அதாவது, நமது 10 ஆண்டுகளுக்கு முந்தைய படம் ஒன்றுடன், நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்ற படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றுவது.

நமக்கு இது ஒரு விளையாட்டாக தோன்றலாம். ஆனால், உண்மையில், இது ஃபேஸ்புக் நிறுவனத்தால் பல கோடி பயன்பாட்டாளர்களின் முகமாற்ற அடையாளம் சார்ந்த தரவுகளை திரட்டி, முகமறிதல் (Face Recognition) என்கிற செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு செய்யப்படும் சூழ்ச்சி!

இந்த தொழில் நுட்பத்தின் மூலம், நீங்கள் ஒரு கடைக்குள் நுழைகிறீர்கள் என்றால், கடைக்காரர் நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், என்ன பொருளாதார பின்னனி, கல்வி தகுதி என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவலையும் கொண்டு உங்களிடம் எந்த பொருளை விற்கலாம், என்ன விலையில் விற்கலாம் என்பது முதற்கொண்டு முடிவெடுக்க முடியும்.

திறன் கருவிகளும் தகவல் திரட்டிகளும்

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் திறன் பேசியின் ஒலிவாங்கியை உங்கள் அனுமதியோ, உணர்வோ இல்லாமல் இயக்கி, நீங்கள் மக்களிடம் என்ன பேசுகிறீர்கள், அலுவலகத்தில் என்ன உரையாடுகிறீர்கள், வீட்டில் என்ன உரையாடுகிறீர்கள் என கேட்க முடியும்.

வீட்டின் வாழ்வறையில் வைக்கப்பட்டுள்ள திறன் தொலைக்காட்சி பெட்டியின் ஒலி பெருக்கியை ஒலி வாங்கியாக பயன்படுத்தி, நீங்கள் குடும்பத்துடன் என்ன உரையாடுகிறீர்கள் என கேட்க முடியும்.

மொத்த உரையாடல் தேவை இல்லை என்றால், எதாவது ஒரு குறிச் சொல் பேசினால் மட்டும், செயற்கை அறிவாற்றல் கொண்டு  ஒலி வாங்கியை இயக்கி, அந்த குறிச் சொல் தொடர்பான உரையாடல் என்ன என்பதை திரட்ட முடியும்.