சுமார் 2.25 ஏக்கர் பரப்பளவில் 298 கடைகள் அமைந்து, 1000 திற்கும் மேற்பட்ட உண்மையான உழவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டதுதான் ஓசூர் உழவர் சந்தை.
ஓசூர் உழவர் சந்தை அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே, வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் விளை பொருள் உற்பத்தியாளர்கள், நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தமது விளை பொருட்களை விற்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் கூடுதல் வருவாய் ஈட்ட வேண்டும்.
அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்களின் கனவு திட்டம் இந்த உழவர் சந்தை திட்டம். மதுரையில் நவம்பர் 15, 1999 அன்று, முதல் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஓசூரில் 2000 ஆவது ஆண்டில் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.
ஓசூர் உழவர் சந்தை தமிழகமெங்கும் உள்ள உழவர் சந்தைகளில் பெருமளவு விற்பனை நடக்கும் சந்தைகளில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு இந்த சந்தைக்கு சுமார் 5000 வாடிக்கையாளர்கள் வருகை புரிந்து, 100 டன் காய்கறிகள் அளவிற்கு விற்பனை நடக்கிறது. பண மதிப்பில் இது சுமார் ரூபாய் 30 லட்சம் ஆகும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழா நாட்களில் இது இரண்டு மடங்காக திகழ்கிறது.
இப்படி சிறப்புமிக்க ஓசூர் உழவர் சந்தையின் இன்றைய அவல அவல நிலைக்கு அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் தள்ளப்பட்டுள்ளது என்கிற செய்தி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள்:
வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் அற்ற, உண்மையான விளைபொருள் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும் என்று அமைக்கப்பட்ட இந்த ஓசூர் உழவர் சந்தையில் இன்று சுமார் 40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் சந்தை வளாகத்தில் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர் என்கிற செய்தி பொதுமக்களை அச்சமடைய வைக்கிறது.
உழவர் சந்தையில் 300 கடைகள் அளவிற்கு அமையப்பெற்றுள்ளது என்றால், சுமார் 1200 விளை பொருள் நேரடி உற்பத்தியாளர்களுக்கு கடை அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் விளைபொருள் உற்பத்தி செய்யும் உண்மையான உழவர்கள் தொடர்ந்து பொருள் உற்பத்தி செய்து ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனை செய்ய இயலாது. அரசு ஊழியர்களின் அலட்சியத்தால், விளை பொருள் உற்பத்தியாளர்கள் ஊக்கப்படுத்தப்படாமல் வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காய்கறி மொத்த சந்தை விலையை காட்டிலும் சற்று கூடுதலான விலை மட்டுமே உழவர் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று அரசின் சட்ட விதிமுறைகள் இருப்பினும், இந்த வியாபாரிகளும் இடைத்தரகர்களும் அரசு ஊழியர்களை மிரட்டி, தாங்கள் சொல்லும் விலையை பட்டியலாக வெளியிட வைக்கின்றனர் என்கிற கசப்பான உண்மை அதிர்ச்சி அளிக்கிறது.
சந்தையை வழிநடத்த வேண்டிய சந்தைக்கான அரசு ஊழியர்களே வெங்காயம், வெள்ளைப் பூண்டு, உருளைக்கிழங்கு, இஞ்சி மற்றும் தக்காளி போன்ற நாளது பயன்பாட்டில் உள்ள விளை பொருட்களை FPO/சுய உதவிக் குழுக்கள் என்கிற போர்வையில் மறைமுகமாக கடையெடுத்து சந்தை வளாகத்தில் விற்பனை செய்து வருவதால், அவற்றின் விலை, வெளி கடைகளை காட்டிலும் கூடுதலான விலையில் சந்தை வளாகத்தில் விற்கப்படுகிறது. விலைப்பட்டியலும் அந்த அரசு ஊழியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தங்களுக்கு ஏற்ப விலையை முடிவு செய்து கொள்கின்றனர்.
பட்டியலிடப்பட்ட விலையை காட்டிலும் காய்களை கூடுதலான விலைக்கு சில வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் விற்கின்றனர். தட்டிக் கேட்கும் வாடிக்கையாளர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளும், வெளியில் சொல்ல தகாத வார்த்தைகளால் வஞ்சிக்கப்படும் நிகழ்வுகளும் ஓசூர் உழவர் சந்தையில் நாளது நிகழ்வாக திகழ்ந்து வருகிறது.
உழவர் சந்தை நடைமுறைப்படி, ஒவ்வொரு நாளும் காலையில் விளை பொருட்களை எடுத்து வரும் உழவர்களுக்கு குலுக்கல் முறையில் கடை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன் நோக்கம் என்னவெனில், அனைத்து உழவர்களுக்கும் சரிசமமான வாய்ப்பு கிடைக்கப் பெற வேண்டும் என்பதே. ஆனால் அத்தகைய நடைமுறைகள் ஓசூர் உழவர் சந்தை வளாகத்தில் நடைபெறுவது இல்லை. விற்பனையாளர்கள் அவரவர் அடாவடிகளை பொறுத்து நிரந்தர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மோசடிகளுக்கான தலையான வாய்ப்பாக திகழ்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.
தலைமை இல்லாத ஓசூர் உழவர் சந்தை:
தலைமை சரியாக இருந்தால் தானே ஒரு இயக்கம் முறையாக செயல்பட இயலும்! ஓசூர் உழவர் சந்தையை பொறுத்த வரை அங்கே தலைமை பொறுப்பு என்று யாரும் இல்லை. கேலிக்கூத்தின் உச்சம் என்னவென்றால், நிலையான பொறுப்பு அலுவலர் (AO) இல்லாமல் கிழமைக்கு மூன்று AO க்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களில் யாரும் எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்வது இல்லை. வந்தோம்... நாற்காலியில் அமர்ந்தோம்... வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டோம்... இடத்தை காலி செய்தோம் என்கிற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
ஒழுங்கீனத்தின் உச்சமாக இங்கு பணி செய்யும் ஒரு சில கடைநிலை ஊழியர்கள், சந்தை வளாகத்தில் கந்துவட்டி தொழில் செய்து வருவதாகவும் தகவல்கள் பொதுமக்களிடையே பரவி வருகிறது.
சந்தையில் பணிபுரியும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், காய்கறி விற்பவர்களிடம் பணம் கொடுக்காமல் நாள்தோறும் காய்கறிகளை பறித்துச் செல்வதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
முறையான தரச் சான்றிதழ் பெறப்படாத எடை கருவிகள் இந்த சந்தை வளாகத்தில் பரவலாக பயன்படுத்தப்பட பணி புரியும் அரசு ஊழியர்களே உதவி செய்கின்றனர் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.
இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டியது மாவட்டத்தின் துணை இயக்குனர் (DD - Marketing). அவர் சுமார் ஆறு திங்கள்களுக்கு முன் பதவியேற்று, இன்று வரை சிறப்புமிகு ஓசூர் உழவர் சந்தையை ஒரு முறை கூட நேரில் வருகை புரிய மற்றும் ஆய்வு செய்யவில்லை.
பொறுப்பேற்கும் AO, ஓசூர் உழவர் சந்தையை சீர் செய்ய முயற்சி செய்தால், வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் சென்று கூச்சலிட்டு ஆர்ப்பரிப்பதாக தகவல். அங்கே இடைத்தரகர்களுக்கு இடைத்தரகராக மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் PA AGRI செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. PA AGRI நான்கு துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் DD களுக்கு தலைமையாக செயல்பட வேண்டியவர்!
அவர் அரசு ஊழியர்களை, இடைத்தரகர்கள் முன்னிலையில் ஒருமையில் பேசியும், மிரட்டியும் கையாள்வதால் உண்மையிலேயே தொண்டாற்ற வேண்டும் என்கிற மனநிலையில் உள்ள அரசு ஊழியர்கள் அமைதியாக இடம் மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். சில அரசு ஊழியர்கள் தங்களது கருத்தை வலுவாக முன்மொழிந்தால், இந்த PA AGRI நீ என்ன திமுக காரணா? என மிரட்டுவதாகவும் தகவல்!
இவர் ஓய்வு பெறும் வயதை ஒட்டி இருக்கும் நிலையில், இவருக்கு ஓசூர் உழவர் சந்தையை குறித்து அடிப்படை புரிதலும் இல்லை, தமக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் திறனும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது என சில அரசு அலுவலர்கள் புலம்புகின்றனர்.
ஓசூர் உழவர் சந்தையை மீட்டமைக்க என்ன தேவை?
1. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், ஓசூர் உழவர் சந்தை நடவடிக்கைகளில் தலையிட்டு வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. PA Agri அவருக்கு கீழ்ப்பணிபுரியும் அரசு ஊழியர்களை மரியாதையுடன் நடத்தும் விதமாகவும், அரசியல் சார்பு இல்லாதவராகவும் பணியமர்த்தப்பட வேண்டும்.
3. முழு நேர பணியில் AO பணியமர்த்தப்பட வேண்டும். AOO மற்றும் கடைநிலை அரசு ஊழியர்கள் வளாகத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வலியுறுத்தப்பட வேண்டும்.
4. நாள்தோறும் குலுக்கல் முறையில் மட்டுமே கடைகளுக்கான இடம் உண்மையான உழவர்களுக்கு/ விளைபொருள் உற்பத்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
5. யாருடைய தலையீடும் இல்லாமல் ஓசூர் உழவர் சந்தைக்கான விலைப்பட்டியல் முடிவெடுக்கப்பட வேண்டும்.
6. வாடிக்கையாளர்களிடம் முறையற்ற வகையில் நடந்து கொள்ளும் வியாபாரிகள் ஓசூர் உழவர் சந்தை வளாகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்.
7. FPO/ சுய உதவிக் குழுக்கள் என்கிற பெயரில் மறைமுகமாக கடை அமைத்துள்ள அரசு ஊழியர்களை கண்டறிந்து, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, உண்மையான குழுக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
8. வட்டி தொழிலில் ஈடுபடும் கடைநிலை ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
மேற் சொன்ன கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் கவனத்தில் ஏற்று அரசின் கனவு திட்டமான ஓசூர் உழவர் சந்தை திட்டத்தை மேன்மை அடையச் செய்வார்களா என பொதுமக்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கின்றனர்.