திருமணம் முறிவு பெற்ற மனைவிக்கு பராமரிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட தீர்ப்பின்போது மனைவிக்கு பொருளாதார அடிப்படையில் அதிகாரமளியுங்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
திருமணம் முறிவு பெற்ற மனைவிக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்ற வெளியிட்ட ஆணையை எதிர்த்து, திருமணம் முறிவு பெற்ற தெலுங்கானா இஸ்லாமிய பெண்கள், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கோர முடியாது என்று கூறி, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை வினவிய உச்ச நீதிமன்றம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண்கள் பராமரிப்புத் தொகை பெறுவதை சட்டம் தடுக்கவில்லை என்று தெரிவித்துவிட்டது.
முன்னாள் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறுவது என்பது திருமணம் முடிவு பெற்ற - மத வேறுபாடு இல்லாமல் - அனைத்துப் பெண்களின் உரிமை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா உயர் நீதிமன்ற ஆணையின்படி பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து, வழக்கை வினவிய உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.வி. நாகரத்தினா, தீர்ப்புடன் சில கருத்துகளைப் பதிவு செய்தார். அதில், இந்திய கணவர்கள், வீட்டில் இருக்கும் மனைவிக்கு, குடும்பத் தலைவிகளுக்கு அதிகாரம் அளிக்க, பொருளாதார அடிப்படையில் உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கணவர்கள், தங்களது வருமானத்தை ஆளுமை செய்யும் அதிகாரத்தையும் மனைவிகளுக்கு வழங்க வேண்டும். குடும்பத் தலைவிகள், தங்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பணத்தை அவர்களுக்கென வழங்க வேண்டும்.
பொருளாதார அடிப்படையில் மனைவிக்கு அதிகாரமளித்தல் அவர்களை பாதுகாப்பாக உணரவைக்கும். பொருளாதார அடிப்படையில் அவர்களுக்கு அதிகாரமளிப்பது, மரியாதையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, திருமணமான பெண்கள், குறிப்பாக இந்தியாவில் வீட்டை பேணும் பெண்கள், பொருளாதார அடிப்படையில் முழு உரிமை பெறாததால், அவர்களது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் கூட அவர்கள் சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
எனவே, திருமணமான இந்திய ஆண்கள், தங்களது மனைவிகளுக்கு பொருளாதார அடிப்படையில் உரிமை அளித்து அவர்களிடம் போதிய அளவில் பணம் இருப்பதை உறுதி செய்துகொண்டு, அவர்களது தனிப்பட்ட தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வேலைக்குச் செல்லும் குடும்பத் தலைவிகள், பொருளாதார அடிப்படையில் முழு உரிமை உடன் செயல்படலாம், அல்லது பகுதியாக செயல்படலாம். ஆனால், வீட்டில் இருக்கும் பெண்களின் பொருளாதார நிலையானது எப்படி இருக்கிறது? அவரது ஒட்டுமொத்த பொருளாதார தேவைக்கும் அவர் கணவரையோ அல்லது குடும்பத்தையோ சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது? என்று நீதியரசர் பி.வி. நாகரத்தினா, அளித்த தீர்ப்பில் தமது கருத்தை கேள்வியாக எழுப்பியுள்ளார்.
இந்திய குடும்பத் தலைவிகள், தங்களது கணவர் மற்றும் பிள்ளைகள் மீது அளவற்ற அன்பு, பாசம், கவனிப்பு ஆகியவற்றை பொழிய வேண்டும். ஆனால் அதற்கு கைமாறாக பொருளாதார உரிமையையோ, கணவர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து உரிய மரியாதையையோ, பொருளாதார பாதுகாப்பையோ அவர் எதிர்பார்க்கக் கூடாது, என்று இந்த சமுதாயம் பெண்களை நம்பவைப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.
அதாவது, ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவுத் தொகையில்தான், அந்தக் குடும்பத்தின் பெண்கள் மிச்சம் பிடித்து, அதில் பெருமளவில் தொகையை சேமித்து, அதிலிருந்தே தங்களது அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு, கணவர் அல்லது குடும்பத்தாரிடம் எந்தத் தேவைக்காகவும் பணத்தைக் கேட்டுப் பெறாத பெண்களே மிகச் சிறந்த குடும்பப் பெண்கள் என்று சமுதாயம் பெண்களை நம்பவைக்கிறது.
பெரும்பாலான இந்திய திருமணமான ஆண்கள், குடும்பத் தலைவிகளின் சில முதன்மையான தேவைகள் கூட, எந்த கலந்தாலோசனையும் இல்லாமல் கணவர் அல்லது கணவர் குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், வேலைக்குச் செல்லாமல் வீட்டைப் பேணும் பெண்கள், உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பொருளாதார அடிப்படையிலும் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தாரைத்தான் சார்ந்திருக்கிறார்கள் என்பதையோ அதிலிருக்கும் சிக்கல்களையோ பெரும்பாலான கணவர்கள் உணர்ந்திருப்பதே இல்லை என்றும் நீதியரசர் நாகரத்தினா சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் நபரின் சார்பில் வழக்காடிய வழக்குரைஞர், முஸ்லிம் பெண், பராமரிப்புத் தொகை கேட்பது, திருமண முறிவு தொடர்பான உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி முடியாது என்று வழக்காடினார். இதனை உச்ச நீதிமன்றம் மறுத்து, பொதுச் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண் பராமரிப்புத் தொகை கோரலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, இஸ்லாமிய பெண்கள் திருமணம் முறிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ மீறும் வகையில் இல்லை என்றும், பராமரிப்புத் தொகை பெற ஏற்கனவே ஆணையிட்டுள்ள நிலையில் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் கூறுகையில், திருமண முறிவு பெற்ற மனைவிக்கு பராமரிப்புத் தொகை அளிப்பது தொண்டாற்றுவது போன்றது அல்ல. அது திருமணமான பெண்ணின் அடிப்படை உரிமை. மதங்களைக் கடந்து, பாலின சமத்துவத்தைக் கொண்டுவரவும், பெண்களும் பொருளாதார பாதுகாப்புப் பெறவும் இது வழிவகை செய்கிறது என்றது உச்ச நீதிமன்ற அமர்வு.
முஸ்லிம் நபர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதோடு, சட்டப்பிரிவு 125, திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தக்கூடியது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.