வீடுகளுக்கான மின் இணைப்பில், ஒருமுனை மின் இணைப்பு மற்றும் மும்முனை மின் இணைப்பு என இருவகையில் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. முதலில் இந்த இரு வேறு வகை மின் இணைப்பு குறித்து புரிந்து கொள்வோம்.
மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
மின்னாக்கி மூலமாக, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நாம் நன்றாக அறிவோம்.
மின்னாக்கியின் காந்தப்புலத்தின் நடுவே ஓர் மின்கடத்து பொருள் சுழலும் போது, அந்த சுழலும் மின் கடத்தும் பொருளில் மின்சார ஓட்டம் ஏற்படுகிறது. இதுதான் அடிப்படை. பொதுவாக மின்னாக்கியின் செயல்பாடு இவ்வாறாக இருக்க, ஞாயிறின் ஒளியில் இருந்து மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி மட்டும் இதில் இருந்து முற்றாக வேறுபடுகிறது.
காந்தங்களை சுழற்றி அல்லது மின் கடத்து புலன்களை சுழற்றி அல்லது இவ்விரண்டையும் எதிர் எதிர் திசைகளில் சுழற்றி, மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி, பொதுவாக மும்முனை மின்சாரமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஏனெனில், இதனால் மின் உற்பத்தித் திறன் பெருமளவு கூடுகிறது.
இவையெல்லாம், ஒன்றுக்கொன்று 120 டிகிரி வேறுபாட்டில் அமைக்கப்படுவதால், 120 டிகிரிக்கு ஒரு முனை என கணக்கிடப்பட்டு, 360 டிகிரிக்கு, மூன்று முனை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்று முனைகளிலும் ஒரே வகையான மின் அழுத்தமே உற்பத்தி செய்யப்படும். இவற்றை R, Y, B (சிவப்பு - RED, மஞ்சள் - YELLOW, நீலம் - BLUE) என மூன்று வண்ணங்களை குறிப்பதாக குறிக்கிறார்கள்.
நொதுமப்புள்ளிக்கும், ஒரு முனைக்கும் மின் அழுத்த வேறுபாடு 220V என்றால், இரண்டு முனைகளுக்கான மின் அழுத்த வேறுபாடு இரண்டு மடங்காக, அதாவது 440V கிடைக்கிறது.
ஒருமுனை - மும்முனை மின் இணைப்பு:
ஒருமுனை இணைப்பில், மின்மாற்றி இணைப்பில் இருந்து, இரண்டு வடங்கள் வீட்டிற்கு இணைப்பாக கொடுக்கப்படும். ஒரு வடத்தில், மின்சாரமும் (Phase), மற்றொன்று பொது தரையிணைப்பு (Neutral) வழங்கப்படுகிறது. இரண்டிற்குமான மின்னழுத்த வேறுபாடு 220V மற்றும் 2300 வாட் (2.3 KW) மின் பயன்பாடு என வரையறுத்துக் கொடுக்கப்படுகிறது. இத்தகைய இணைப்பில், 4000 வாட் (20 Amp) பயன்பாடு வரை அனுமதிக்கப்படுகிறது.
மேற்சொன்ன 4000 வாட் மின் பயன்பாட்டிற்கு மேலான மின்சார தேவை உள்ளவர்கள், மும்முனை இணைப்பு பெற வேண்டும். அத்தகை இணைப்பிற்கு மொத்தம் நான்கு வடங்கள் மின்மாற்றியில் இருந்து வீட்டிற்கு இணைப்பாக வரும். ஒரு வடம் பொது தரையிணைப்பு (Neutral), மற்ற மூன்று வடங்களில், R, Y, B என்ற மும்முனை மின்சாரம் கிடைக்கும். இத்தகைய இணைப்புகள், 63 Amp மின்சார பயன்பாடு வரை வீட்டு இணைப்புகளுக்கு பொருந்தும்.
பொது தரையிணைப்பிற்கும் (Neutral) தரையிணைப்பிற்கும் (Earthing) வேறுபாடு என்ன?
பொது தரையிணைப்பு, மின்மாற்றியில் பொது தரையிணைப்பாக கொடுக்கப்பட்டு, மின்சாரம் பயன்படுத்துபவரின் இடம் வரை கொடுக்கப்படுகிறது. பொதுவாக, பயன்படுத்தப்படும் மின்சாரம், பயன்பாட்டில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினால், பொது தரையிணைப்பு மூலம் மீண்டும் மின்மாற்றியை வந்தடையும்.
பொது தரையிணைப்பு, மின்மாற்றியில் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். வீடுகளில் அதை, தரையிணைப்பு (Earthing) செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், திரும்பிச் செல்லும் மின்சாரம் (Return Current) பயன்படுத்தப்பட்டதாக கணக்கிடப்படும். அதனால் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
பொது தரையிணைப்பு (Neutral) துண்டிப்பு ஏற்பட்டால் விளைவு என்ன?
மின் துண்டிப்பு போலவே, பொது தரையிணைப்பு (Neutral) துண்டிப்பு என்பதும் ஒரு மின்சார துண்டிப்பு தான்.
மின் துண்டிப்பு (Phase Failure) ஏற்பட்டால், அதனால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. அதேவேளையில், பொது தரையிணைப்பு (Neutral) துண்டிப்பு ஏற்பட்டால், உயர் மின் அழுத்தம் ஏற்படும். இதனால் பயன்படுத்தப்படும் மின் பொருட்கள் பாதிப்படையும்.
எடுத்துக்காட்டாக, மின்மாற்றியில் இருந்து கொடுக்கப்படும் மும்முனை மின்சாரத்தில், மின்சுமை ஏற்றத்தாழ்வுகள் 5 - 15% என கணக்கிட்டால், பொது தரையிணைப்பு (Neutral) அதை ஈடு செய்து கொள்ளும். பொது தரையிணைப்பு (Neutral) துண்டிக்கப்பட்ட நிலையில், அத்தகைய ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க வாய்ப்பு இல்லை என்பதால், அது பயன்படுத்தப்படும் மின் முனையில், தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, எந்த மின் முனையில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படுகிறது, அந்த முனையில் மின் அழுத்தம் கூடுதலாகவும், எதில் கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது, அந்த முனையில் மின்னழுத்த குறைவும் ஏற்படும்.
மும்முனை இணைப்பில் இத்தகைய பாதிப்பு என்றால், ஒரு முனை இணைப்பு கொண்ட வீடுகளில், மின் பொருட்களின் மீது மின்சாரம் பாய துவங்கி, பயன்படுத்துபவர்களுக்கு மின் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இத்தகைய நிலையில், MCB மற்றும் RCCB தனது வேலையைச் செய்யாது. ஒருமுனை இணைப்பில், மின்சார பொருளுக்கு பாதிப்பு இல்லை, ஆனால், பயன்படுத்துபவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்படுத்தும்.
இதற்கான தீர்வு:
பொதுவாக இத்தகைய நிலைகளுக்கு தீர்வு என்று எந்த கருவிகளும் கிடைப்பது இல்லை. காற்று மழை உள்ள வேலைகளில் மின் பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு மற்றொரு தீர்வாக, காண்டாக்டர் (Contactor) பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும் பொழுது, பொது தரையிணைப்பு (Neutral) துண்டிக்கப்பட்டால் காண்ட்ராக்டர் செயலிழந்து மின்சாரம் துண்டிக்கப்படும்.











